பதிவு செய்த நாள்
06
மே
2019
01:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரியில் சித்திரை அமாவாசையை முன்னிடடு 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நேற்று (மே., 5ல்) சுவாமி தரிசனம் செய்தநிலையில், அறநிலையத்துறை அராஜக போக்கால் அன்னதானம் மடங்கள் மூடப்பட்டதால், காலை 9:00 மணிக்கே ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.60 கொடுத்தும் கிடைக்காது பரிதவித்த பக்தர்களின் சாபத்திற்கு இந்து அறநிலையத்துறை ஆளாகியது.
சதுரகிரியில் பக்தர்களுக்கு இலவசமாக உணவு, குடிநீர் வழங்கி வந்த அன்னதானம் மடங்களை இந்து அறநிலையத்துறை மூட உத்தரவிட்டது. இதனால் கோயில் பக்தர்கள் உணவு, குடிநீர் அவதிப்படுகின்றனர். அறநிலையதுறை அனுமதியுடன் செயல்படும் கடைகளில் இட்லி ரூ. 20, தோசை ரூ. 100, குடிநீர் பாட்டில் ரூ. 50 என விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு கடந்த மே 2 முதல் கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் 2 நாட்களில் ஆயிரத்து 500க்கு மேற்பட்ட பக்தர்கள் வந்தநிலையிலேயே குடிநீர், போதிய உணவு கிடைக்காமல் பட்டினியுடனும், தாகத்துடனும் கோயிலுக்கு சென்று திரும்பினர். அமாவாசை நாளான நேற்று (மே., 5ல்) காலை 6:00 மணி முதல் வனத்துறையினர் சோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட்டனர்.
தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் மலையேற துவங்கினர். ஆனால் மலைப்பகுதியில் நிலவும் வறட்சியால் நீர்வரத்து ஓடைகளில் தண்ணீர் வராதநிலையிலும், கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் தொன்னையில் புளியோதரை, தயிர் சாதம் போன்ற பிரசாதங்கள் வழங்கபட்டாலும் அவை போதுமானதாக இல்லாததால் அரைவயிற்று பசியுடன் திரும்பினர். பக்தர்கள் கொண்டு சென்ற தண்ணீரும் மலையேற்றத்தின்போதே காலியாகியதால் தாகம் தீர்க்க அங்குள்ள கடைகளில் தண்ணீர் பாட்டில்களை அதிக விலை கொடுத்து வாங்கினர். காலை 9:00 மணிக்கே ரூ. 60 கொடுத்தும் தண்ணீர் பாட்டில்கள் கிடைக்கவில்லை என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
சிரமம் கொடுப்பது கொடுமை: பக்தர்கள் கூறுகையில் ’மலையில் போதியளவிற்கு குடிநீர் கிடைக்கவில்லை. கோயிலில் கொடுக்கும் பிரசாதங்கள் போதுமானதாக இல்லை கொளுத்தும் வெயிலிலும், தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காமல் மிகவும் சிரமத்துடன் தரிசனம் செய்து திரும்பினோம். அறநிலையத்துறை பக்தர்களுக்கு சிரமத்தை கொடுப்பது மிகவும் கொடுமையானது. கடைகளில் அதிக விலை கொடுத்து தான் தண்ணீர் பாட்டில்கள் வாங்கமுடிந்தது. அதுவும் காலை 9:00 மணிக்கு பிறகு வந்த பக்தர்களுக்கு கிடைக்கவில்லை. பக்தர்களுக்கு வயிறார உணவு தர முடியாத அறநிலையத்துறை தனியார் மாடங்களில் அன்னதானம் வழங்க அனுமதிக்கவேண்டும். இல்லையெனில் பக்தர்களின் சாபத்திற்கு அறநிலையத்துறையினர் ஆளாகுவார்கள்,’ என்றனர்.