பதிவு செய்த நாள்
07
மே
2019
12:05
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத்திருவிழா இன்று துவங்குகிறது. ஏ.டி.எஸ்.பி., தலைமையில் 648 போலீசார் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு ஏப்.17 ல் கொடியேற்றப்பட்டது. இன்று திருவிழா துவங்குகிறது. மலர் விமானத்தில் அம்மன் ஊருக்குள் பவனி வருகிறார். நாளை முத்துப் பல்லக்கு, மறுநாள் புஷ்ப பல்லக்கில் அம்மன் உலா வருகிறார். மே 10 ல் தேரோட்டம் நடக்கிறது.
13 ல் தேர் நிலைக்கு வந்து சேரும். 14 ல் ஊர் பொங்கலுடன் நிறைவு பெறுகிறது. தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை திரள்வார்கள். அவர்களின் வசதிக்காக பெரியாறு அணையில் இருந்து முல்லை பெரியாற்றில் கூடுதல் நீர் திறக்கப்படுகிறது.கட்டுப்பாட்டு அறை: ஏ.டி.எஸ்.பி. சுருளிராஜன் தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள், 7 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 648 போலீசார் பாதுகாப்பு பணியில் ஷிப்ட் முறையில் ஈடுபட உள்ளனர். ஆற்றின் இருபுறம் மற்றும் கோயில் வளாகம் என 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளனர்.
கோயிலுக்குள் 3 ஷிப்ட், வெளியே 2 ஷிப்ட் முறையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். இங்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை, 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மப்டியில் ஷிப்டுக்கு 4 பேர் வீதமும், குற்றத்தடுப்பு போலீசார் 38 பேர் ரோந்து சுற்றி வருவார்கள்.வாகன நிறுத்தம்: பெரியகுளம் ,தேனியில் இருந்து வரும் வாகனங்கள் உப்புக்கோட்டை விலக்கு அருகே அண்ணாமலை நகர் பகுதியிலும், தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டிற்கு அருகே எல். எஸ். மில் அருகே திட்டச்சாலையில் இலகுரக கனரக வாகனங்கள் நிறுத்தலாம்.
கண்டமனுார், வருஷநாடு பகுதி வாகனங்கள் வீரபாண்டி பைபாஸ் வயல்பட்டி தெற்கிலும், அறநிலையத்துறை இடத்தில் நிறுத்தலாம். சின்னமனுார் வழியாக வரும் வாகனங்கள் வீரபாண்டி போலீஸ் குடியிருப்பு பகுதியில் அண்ணாமலை நகரில் நிறுத்தலாம். பயணிகள் பஸ்கள், பக்தர்கள் வாகனங்கள் பைபாஸ் வழியாக அனுமதிக்கப்படும். அதனால் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. கனரக வாகனங்கள் உப்புக்கோட்டை, தப்புக்குண்டு வழியாக செல்லலாம். போக்குவரத்து பிரிவு தனியாக செயல்படும். விழா பகுதிகள் போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது , பாஸ்கரன் எஸ்.பி., தெரிவித்தார்.