பதிவு செய்த நாள்
07
மே
2019
02:05
செஞ்சி:செஞ்சி கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் தேர்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி கோட்டை ராஜகிரி மலைமீது 1000 ஆண்டுகள் பழமையான கமலக் கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு தேர் திருவிழா நேற்று (மே., 6ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று (மே., 6ல்)காலை 6:00 மணிக்கு கமலக்கன்னியம்மன், ஸ்ரீமகா மாரியம்மன், ராஜகாளியம்மன், கோட்டை வீரன், அம்மச்சார் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 9:00 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் கணபதி, லட்சுமி ஹோமமும் நடந்தது. 10:00 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து, கொடியேற்றம் நடந்தது.தொடர்ந்து அம்மனுக்கும் விழா குழுவினருக்கும் காப்பு அணிவித்தனர். மாலை கமலக்கன்னியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் நடந்தது.
இரவு பூங்கரகம் மற்றும் மகா மாரியம்மன் சுவாமி வீதியுலா நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 14ம் தேதி காலை 6:00 மணிக்கு 108 பால் குடம் ஊர்வலமும், 10:00 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தலும், பகல் 2:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெற உள்ளது.
ராஜகிரிக்கு இலவசம்கமலக்கன்னியம்மன் கோவில் திருவிழா பாரம்பரியமிக்க விழா என்பதால் கோவிலில் உள்ள செஞ்சி ராஜகிரி கோட்டைக்கு பொது மக்கள் சென்று வர நேற்று (மே., 6ல்) முதல் 15ம் தேதி வரை இந்திய தொல்லியல் துறையினர் இலவச அனுமதி வழங்கியுள்ளனர்.