கோவில்பாளையம்:மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவிலில் மழை வேண்டி யாகம் நடந்தது.தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. கோடை வாட்டி வதைக்கிறது. நிலத்தடி நீர் மட்டம், 1,200 அடிக்கு கீழ் சென்று விட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பிரசித்தி பெற்ற கோவில்களில் மழை வேண்டி யாகம் மற்றும் வருண ஜபம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி சிவாலயங்களில் மழை வேண்டி வேள்விகள் நடைபெற்று வருகிறது. அதே போல் பெருமாள் கோவில்களிலும் யாகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் நேற்று (மே., 7ல்), மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவிலில் காலை 7:00 மணிக்கு வர்ண சூக்த காயத்ரி ஹோமம் நடந்தது.
வெங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியரோடு அருள்பாலித்தார். அப்போது ஆண்டாள் இயற்றிய திருப்பாவையில் ஆழிமழைக்கண்ணா என்று துவங்கும் பாடலை பாராயணம் செய்தனர்.
சாற்றுமுறைக்கு பின் சிறப்பு பூஜை நடந்தது.அமிர்த்வர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி ராகத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் நேற்று (மே., 7ல்)மாலை மொண்டி பாளையத்திற்கு மேற்கு பகுதிகளில் அரை மணி நேரம் தொடர்ந்து கன மழை பெய்தது. அப்பகுதி விவசாயிகளும் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் விளை நிலங்களில் மலர்த்தூவி இயற்கைக்கு நன்றி தெரிவித்தனர்.