சதுரகிரியில் கூடுதல் குடிநீர் குழாய் விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2019 03:05
வத்திராயிருப்பு:சதுரகிரி கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன்கருதி தாணிப்பாறையி லிருந்து கோயில் வரை, நூறு அடி தூரத்திற்கு ஒரு குடிநீர் குழாய் அமைக்க விஸ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவ்அமைப்பின் மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக் கூறியதாவது:தமிழகத்தில் நாளுக்கு நாள் பக்தி , ஆன்மிகம் வளர்ந்து வருகிறது. இதனால் புராணகால கோயில்களை தேடி அதிகளவில் வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவருகின்றனர்.
அந்த வகையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்து தருவதில் அறநிலையத்துறை மற்றும் வனத்துறையினர் அலட்சிய போக்குடன் நடந்து கொள்கிறார்கள்.
பல லட்சம் மக்கள் வந்து செல்லும் சபரிமலையில் போதிய அடிப்படை வசதிகள் செய்யபடும் நிலையில், சில ஆயிரம் பக்தர்கள் வரும் சதுரகிரிக்கு போதிய வசதிகள் செய்து தர தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. இதனால் பக்தர்கள் குடிக்கும் தண்ணீருக்கே அதிக பணம் செலவழிக்கவேண்டியுள்ளது.
தாணிப்பாறை மலையடிவாரத்திலிருந்து கோயில் வரை ஒவ்வொரு நூறு அடி தூரத்திற்கும் ஒரு குடிநீர் குழாய் அமைப்பதே பக்தர்களின் தாகம் தீர்க்க செய்யும். இதற்கு தமிழக அரசு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் ,என்றார்.