மதுரை : மாநிலத்தின் அனைத்து கோயில்களுக்குச் சொந்தமான கட்டளைச் சொத்துக்களை மீட்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. தூத்துக்குடி ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சொந்தமான கட்டளை நிலம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது. சட்டவிரோதமாக தனிநபர்கள் பெயர்களில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சொத்தினை தற்போது அனுபவித்து வருவோர், ஏற்கனவே அனுபவித்தவர்கள், அரசியல் பின்புலம் குறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோல் மாநிலத்தில் பல கோயில்களின் கட்டளைச் சொத்துக்களின் நிலையும் உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் மாநிலத்தின் அனைத்து கோயில்களுக்குச் சொந்தமான கட்டளைச் சொத்துக்களை மீட்கவும், பாதுகாக்கவும் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராதா கிருஷ்ணன் மனு செய்தார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி அமர்வு தமிழக தலைமைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், அறநிலையத்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி, 4 வாரங்கள் ஒத்திவைத்தனர்.