பதிவு செய்த நாள்
12
மே
2019
02:05
திருவாரூர் : கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் ஜெயந்தி இசை விழா, திருவாரூரில் கோலாகலமாக நடந்தது.கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான, முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் ஆகிய மூவரும், திருவாரூரில், 17ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள். ஆண்டுதோறும், திருவாரூரில், இவர்களது ஜெயந்தி விழா நடந்து வருகிறது.நடப்பு ஆண்டு விழா, 9ம் தேதி, திருவாரூர் தியாக ராஜ சுவாமி கோவில், கமலாம்பாள் சன்னிதி எதிரில் துவங்கியது.காஞ்சி, சங்கராச்சாரியார் விஜயேந்திரர், காணொலி காட்சி மூலம், விழாவை துவக்கி வைத்தார். மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவை ஒட்டி, பல இசை நிகழ்ச்சிகள் நடந்தன.
கடந்த, 9ம் தேதி மாலை, 4:45 முதல், இரவு, 8:15 மணி வரை, நாதஸ்வரம், வயலின், மிருதங்கம், பாட்டு போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. தொடர்ந்து, 10ம் தேதியும், இசை நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை, 8:30 மணியளவில், சங்கீத வித்வான்கள் பங்கேற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், திருவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.கவர்னர் பேசுகையில், கர்நாடக இசை, தென் மாநில அளவில் புகழ் பெற்றது. இந்த இசை வளர, கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் பங்கு முக்கியமானது.
இதே போல், விழா கொண்டாடுவது, அடுத்த தலைமுறையினருக்கு பயன் அளிக்கும், என்றார்.காலை, 10:00 மணி முதல், கிளாரிநெட், நாதஸ்வரம், சொற்பொழிவு, பல குழுவினரின் பாட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.ஏற்பாடுகளை, மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாக் குழு தலைவரும், தினமலர் திருச்சி பதிப்பு ஆசிரியருமான, ஆர். ராமசுப்பு வழிகாட்டுதல்படி, விழாக் குழுவினர் செய்திருந்தனர்.திருச்சி மாவட்டம், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ பரமாச்சாரிய சுவாமிகள் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்.