சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலின் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி மே 2 ம் தேதி சந்திவீரன் கூடத்தில் விநாயகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.அங்கு பத்து நாட்கள் தங்கி அருள் பாலித்த கோவில் விநாயகர் இன்று காலை 10:00 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு திரும்புகிறார். இதைத்தொடர்ந்து பகல் 1:30 மணிக்கு பூரணை புட்கலை உடனான சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு காப்பு கட்டப்பட்டு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
வைகாசி விசாகத்திருவிழாவின் முதல் நாளான இன்று இரவு சாமி வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து பத்து நாள் மண்டகப்படியாக நடக்கும் விழாவின் ஒவ்வொரு நாளும் சாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார். மே 16ம் தேதி சேவுகப் பெருமாள் ஐயனார் திருக்கல்யாணமும், 20ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. மே 21ஆம் தேதி பூப்பல்லக்கு உற்ஸவம் நடக்கிறது.ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானமும், சிங்கம்புணரி கிராமத்தார்களும் செய்து வருகின்றனர்.