திண்டிவனம்: திண்டிவனத்தில் உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் 108 சங்காபிஷேகம் நடந்தது. திண்டிவனம் கர்ணாவூர் கிராம ஏரிக்கரையில் உள்ள இளங்காளியம்மன் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 8ம் தேதி ஊரணி பொங்கலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. ஆறாம் நாளான நேற்று உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏழாம் நாளான இன்று 14ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், திருத்தேரில் இளங்காளியம்மன் ஊர்வலம், இரவு 12:00 மணிக்கு உதிரசோறு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை 15ம் தேதி பூத்தேரில் இளங்காளியம்மன் ஊர்வலமும், 16ம் தேதி சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.