17ம் நூற்றாண்டில் தோன்றிய மகான்களில் புகழ்பெற்றவர் குமரகுருபரர். இளம்வயதில் ஊமையாய் இருந்த இவர், திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறம் பெற்றார். தனது குருநாதர் ஞானதேசிகரின் கட்டளைப்படி, வடமாநிலம் சென்று சைவசமயம் தழைக்க பாடுபட்டார். காசிவிஸ்வநாதர் மீது காசிக்கலம்பகம் பாடினார். சரஸ்வதியின் அருளைப் பெறுவதற்காக இவர் பாடிய சகலகலாவல்லி மாலை புகழ்பெற்றது. கலைமகளின் அருளால் யாருடைய உதவியும் இன்றி இந்திமொழியைக் கற்றுக் கொண்டார். மொகலாய மன்னர் ஒருவரைக் காணச் சென்றபோது சிங்கத்தின் மீதேறி அரசவைக்குச் சென்றார். இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட மன்னர், காசியில் மடம் கட்ட அனுமதி தந்ததோடு, வெகுமதியாகப் பலபரிசுகளையும் அளித்தார். குமரகுருபரர் நிறுவிய மடங்களில் காசிமடமும், கேதாரேஸ்வரர் கோயிலும் குறிப்பிடத்தக்கவை.