வைதீஸ்வரன் கோவில் தீர்த்தகுளம் மூடல்: பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2019 11:05
நாகை: சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற தையல் நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவகிரகங்களில் ஒருவரான செவ்வாய் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் இந்த கோவிலில் சித்த மருத்துவத்தில் தலைவரான தன்வந்திரி ஜீவசமாதி அடைந்த தலமாகும்.
வைத்தியநாத சுவாமி எழுந்தருளியுள்ள இந்த கோவிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி சுவாமி அம்பாளை வழிபட்டு இங்கு கொடுக்கப்படும் திருச்சாந்து உருண்டை உட்கொண்டால் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்தகுளம் போதிய பராமரிப்பு இன்றி இருந்தது கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தண்ணீர் மாசு அடைந்ததால் தீர்த்தக் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. இதனை அடுத்து தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராட அச்சம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் பராமரிப்பு பணிக்காக குளத்தை மூடி அறிவிப்பு பலகை வைத்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீராட முடியாமல் பெரும் அவதிக்கு அளவுடன் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். உடனடியாக திருக்குளத்தை சீரமைத்து புதிய தண்ணீர் நிரப்பி பக்தர்கள் நீராட தருமை ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.