வறண்டது பழநி சண்முகாநதி: குளிக்க 1வாளி தண்ணீர் ரூ.10
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2019 11:05
பழநி, மழை இல்லாமல் புனித சண்முகாநதி வறண்டதால், பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீராடுவதற்கு ஊற்று நீரை ஒருவாளி ரூ.10 க்கு விற்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சண்முகாநதியில் குளித்துவிட்டு, அலகு குத்தி, காவடிகள் எடுத்து மலைக்கோயிலுக்கு செல்வது வழக்கம். மேலும் பழநி பகுதி கோயில் திரு விழாக்களுக்கு பக்தர்கள் சண்முகாநதியில் தீர்த்தம் எடுத்து செல்கின்றனர்.தற்போது போதிய மழை இல்லாததால் சண்முகாநதி தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகள் முழுவதும் அமலச்செடிகள் படர்ந்துள்ளன. இவை ஆற்றில் உள்ள குறைந்தபட்ச தண்ணீரையும் உறிஞ்சி விடுகின்றன. இதனால் தற்போது பழநி வரும் பக்தர்கள் சண்முகாநதியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.சிலர் நீர்பிடிப்பு பகுதியில் குழிதோண்டி ஊற்று நீரை எடுத்து ஒருவாளி ரூ.10க்கு விற்கின்றனர். கோயில் சார்பில் குளியல், கழிப்பறை வசதி செய்து தரப்பட்டாலும், ஆற்றுநீரில் குளிப்பதை பக்தர்கள் புனிதமாக கருதுகின்றனர். ஆகையால் சண்முகாநதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இனிவரும் மழைக்காலத்திற்கு முன்னதாக, ஆறை சுத்தம் செய்யவும், கழிவுநீர் கலக்காமலும் பாதுகாக்க வேண்டும். மேலும் பக்தர்கள் வசதிக்காக குளத்துடன் படித்துறை அமைத்து நிரந்தரமாக தண்ணீரை தேக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.