பதிவு செய்த நாள்
01
ஜூன்
2019
10:06
தஞ்சாவூர், தஞ்சை பெரியகோவில் 216 அடி உயரமுள்ள மூலவர் கோபுராத்தை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்கள் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஆபத்தான நிலையில் பணியாற்றி வருகிறார்கள்.
தஞ்சாவூர் பெரியகோவில் கட்டிட கலைக்கு சான்றாக விளங்குவதால்,யுனெஸ்கோ பராம்பாரிய சின்னமாக அறிவித்துள்ளது. மேலும் இக்கோவிலை இந்திய தொல்லியல் துறை பழமை மாறாமல் பாதுகாத்து, பராமரித்து வருகிறது. இதனால் கோவிலில் உள்ள கோபுரங்களுக்கு வர்ணம் பூசவது கிடையாது. கடந்த 2010-ம் ஆண்டு தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டுவதற்கு முன் கோவிலின் உள்ள அனைத்து கோபுரங்களும் வேதியியல் முறையில் சுத்தம் செய்யப்பட்டது. தற்போது 9 ஆண்டுக்கு பிறகு கோவிலில் துாசி படிந்து நிறம் மாறி போனதை தொடர்ந்து மழை நீரால் கற்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, ஹைட்ரோபோபிக் என்ற சிலிக்கான் கலவை கொண்டு, மராட்டியர், கேரளாந்தகன், ராஜராஜன் வாயிற்கோபுரங்கள் சுத்தம் செய்து பணிகள் முடிந்து விட்டன. தொடர்ந்து 216 அடி உயரமுள்ள மூலவர் கோபுரத்தை சுத்தம் செய்யும் பணியில் 30 தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். கோபுரத்தில் ஏறி,இறங்க இரும்பு கம்பிகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், உயரத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபரணங்கள் இல்லாமல் மிகவும் ஆபத்தான முறையில் ஏறி,இறங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது; கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளார்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகளினால் அவர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே காணப்படுகிறது. கட்டுமானம் சிறிய அளவோ அல்லது பெரிய அளவிலோ நடைபெற்றாலும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். உயரமான இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வலை, தலைகவசம், பெல்ட் ஆகியவை நிச்சயம் வழங்கப்பட வேண்டும்.ஆனால் பெரியகோவிலில் துாய்மை செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு அப்படி எதுவும் இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள். இதற்கு தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.