பதிவு செய்த நாள்
08
ஜூன்
2019
11:06
திருப்பூர்:திருப்பூர் அருகே, மேற்கொண்ட கள ஆய்வில், அரிய நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய நாகரிகத்தில், மாற்ற முடியாத அடையாளமாக இருப்பது வெண் சங்கு. சிந்துவெளி
நாகரிகம்தொடங்கி, இன்று வரை, சமுதாய பழக்க, வழக்கங்களிலும் சங்குகள் முக்கிய இடம்பெற்றிருந்தன. வெண் சங்குகளை வாங்க, வெளிநாட்டினர் வந்து செல்லும் அளவுக்கு,
வணிகம் நடந்துள்ள வரலாறுகளும் உள்ளன
கல் மணி உற்பத்தியில் புகழ்பெற்ற, திருப்பூர் மாவட்டம், கொடுமணல், படியூர் பகுதிகளில், சங்கு வணிகம் செழிப்பாக இருந்துள்ளது. அதன்பின், படியூர் அருகிலுள்ள சின்னாரியப் பட்டியில், வணிக குழுவினர் நிரந்தரமாக வசிக்க துவங்கினர். இவ்வணிக குழு, வழியில் வந்த பத்மநாபன் கொடுத்த தகவல் அடிப்படையில், திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய பொறியாளர் ரவிகுமார், பொன்னுசாமி ஆகியோர், சின்னாரியப் பட்டியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ரவிகுமார் கூறியதாவது:ஆய்வில், 600 ஆண்டுகள் பழமையான சங்குமுக பிள்ளையார் மற்றும், 300 ஆண்டு பழமையான நடுகற்கள் ஆகியவற்றை கண்டறிந்துள்ளனர். அதில், சங்குமுக பிள்ளையார் சிற்பம், அழகிய வேலைப்பாடுடன், 120 செ.மீ., உயரம், 100 செ.மீ., அகலத்தில் இருக்கிறது. நான்கு கரங்களுடன் காணப்படும் விநாயகர் சிலையில், வலது மேற்கரத்தில், பிடியுடன் கூடிய சங்கு வைத்துள்ளார்.
கொங்கு மண்டலத்தில், இவ்வகை பிள்ளையார் சிலைகள் மிக அரிதாக இருக்கின்றன. நடுகற்கள், 30 செ.மீ., உயரம், 21 செ.மீ., அகலத்தில் உள்ளது.நடுகல்லுக்கு அருகில், 18 செ.மீ., உயரும், 9 செ.மீ., அகலத்தில், மற்றொரு பெண் சிற்பம், இவர்களை வழிபடும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.