வருஷநாடு: வருஷநாடு அருகே தர்மராஜபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த கவுமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் வழக்கமான பூஜைகளும், விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, சித்திரை, மார்கழி மாத பூஜைகள் என ஆண்டு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
அம்மனுக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்படும். கோடை காலங்களில் வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாத போது அம்மனை வழிபட்டால் ஆற்றில் நீர் வரத்து ஏற்படும். அம்மனை மனமுருகி வேண்டினால் எதிலும் வெற்றி கிடைக்கிறது என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம், வாழ்க்கையில் மனஅமைதி கிடைத்து தொழில் விருத்தியாகி நினைப்பது நடப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டு தோறும் சித்திரை மாதங்களில் அம்மனுக்கு திருவிழா நடத்தப்படும். இதில் ஏராளமானோர் பால் குடம், அக்னி சட்டி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவர்.