பதிவு செய்த நாள்
17
ஜூன்
2019
02:06
ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவில் அலுவலகம், வராண்டாவுக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளது.
ஈரோடு, பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் அலுவலகம், பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில், பழைய கட்டத்தில் இயங்கி வருகிறது. செயல் அலுவலராக ரமணி காந்தன் உள்ளார். அலுவலக மேற்கூரை சேதமடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் உள்ளது.
இதற்கு அறிகுறியாக அவ்வப்போது, சிமென்ட் காரை பெயர்ந்து விழ தொடங்கியுள்ளது. இதனால் சவுக்கு மரக்கட்டையால் முட்டு கொடுத்தனர். இந்நிலையில் கட்டத்தை இடித்து விட, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த, 2016ல் கோவில் செயல் அலுவலராக ராஜா இருந்தபோது, 20 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவில் புனரமைப்பு பணி, காலியாக இருந்த இடத்தில் புது அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால், இதுவரை புது அலுவலகத்தை திறக்க வில்லை. அதே சமயத்தில், பழைய கட்டத்தில் தொடர்ந்து செயல்படவும் முடியவில்லை.
இந்நிலையில் பெரிய மாரியம்மன் மூலவர் சன்னதி பின்புற வராண்டாவில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட அறைக்கு, நேற்று 16ல்., இடமாற்றம் செய்யப்பட்டது. புது அலுவலகம் இருக்கும் போது, வராண்டாவில் தற்காலிக அறை அமைக்க வேண்டியது ஏன்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், புது அலுவலகத்தை திறந்து வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது, பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.