எரிகோவிலிருந்து ஜெருசலேமுக்கு சென்று கொண்டிருந்தான் ஒரு மனிதன். வழியில் திருடர்கள் குறுக்கிட்டு, அவனது ஆடை, பொருட்களை பறிக்க முயன்றனர். அவர்களை தடுத்த போது, அவனை அடித்து காயப்படுத்தி விட்டுச் சென்றனர். அப்போது மதகுரு ஒருவர் அவ்வழியாக வந்தார். ஆனால், அடிபட்டவனை கண்டுகொள்ளாமல் சென்றார். அடுத்ததாக வந்த கஞ்சன் ஒருவனும் கண்டுகொள்ளாமல் சென்றான். மூன்றாவதாக வழிப் போக்கன் ஒருவன், கழுதை மீது வந்தான்.
அடிபட்டு கிடந்தவனுக்கு முதலுதவி செய்தான். காயத்திற்கு கட்டு போட்டு, அவனைக் கழுதையில் ஏற்றிக் கொண்டு அருகிலுள்ள சத்திரத்திற்கு சென்றான். சத்திரக்காரனிடம் பணம் கொடுத்து, “இவரை இங்கேயே தங்க வைத்து கவனித்துக் கொள்ளுங்கள். நான் திரும்பி வரும் போது உங்களுக்கு பணம் தருகிறேன்” என்றான். இந்த சம்பவம் “உன்னிடத்தில் அன்பு கூர்வது போல, பிறனிடத்திலும் அன்பு கூர்பவனே நல்லவன்” என்னும் வசனத்தை நினைவுகூர்வதாக உள்ளது. தன்னைப் போல் பிறரையும் நேசிப்பவனே நல்ல மனிதன்.