திருக்குறுங்குடி கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2012 11:03
களக்காடு : திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் பங்குனி தேரோட்ட திருவிழா நேற்று நடந்தது. திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 108 வைணவ ஸ்தலங்களில் மிகவும் புகழ் பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இவ்வாண்டு பங்குனி தேரோட்ட திருவிழா கடந்த 8ம் தேதி காலை ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீதிஉலா சென்றார். முதல் நாள் பரங்கி நாற்காலி வாகனத்திலும், 2ம் நாள் சிம்ம வாகனத்திலும், 3ம் நாள் திரய திருவடி வாகனத்திலும், 4ம் நாள் ஆதிசேஷ வாகனத்திலும் சுவாமி வீதிஉலா புறப்பாடு நடந்தது. 5ம் திருநாளன்று 5 நம்பிகளும் கருட வாகனத்தில் வீதிஉலா சென்றனர். மறுநாள் அதிகாலையில் மேலரத வீதியில் 5 நம்பிகளும் தேவ சித்த கந்தர்வ மகரிஷிகளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.பின்னர் கோயிலுக்கு எழுந்தருளிய 5 நம்பிகளையும் ஜீயர் சுவாமிகள் வணங்கி அழைத்து சென்றார். இந்நிகழ்ச்சியில் திருக்குறுங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 6ம் திருநாளன்று வெள்ளி யானை வாகனத்திலும், 7ம் திருநாளன்று புஷ்ப பல்லக்கிலும், 8ம் திருநாளன்று குதிரை வாகனத்திலும், 9ம் திருநாளன்று சந்திரபிரபை வாகனத்திலும் சுவாமி வீதிஉலா புறப்பாடு நடந்தது.10ம்திருநாளன்று காலை தேரோட்ட திருவிழா தொடங்கியது. தேரோட்டத்தை திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள் வடம்பிடித்து துவக்கி வைத்தார். நான்குநேரி எம்.எல்.ஏ., நாராயணன், சமக மாநில துணை செயலாளர் இளஞ்சேரன், திருக்குறுங்குடி டவுன் பஞ்.,தலைவர் திருமலைநம்பி உட்பட பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். நேற்று தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.