பதிவு செய்த நாள்
21
ஜூன்
2019
12:06
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், அஷ்டபுஜ பெருமாள் கோவில், தெப்ப குளத்தில், மண்ணில் புதைந்த நிலையில் உள்ள, தாயார் சிலையை மீட்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில் இது, 45வது திவ்யதேசமாக திகழ்கிறது. இக்கோவிலில் மட்டும்தான் பெருமாள், எட்டு திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் அருகில், கஜேந்திரபுஷ்கரணி என, அழைக்கப்படும் தெப்பக்குளம் உள்ளது. கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன், தாயார் சன்னதியில் மூலவராக இருந்த புஷ்பவல்லி தாயார், கருங்கல் சிலை சிதிலம் அடைந்ததால், அச்சிலையை கோவில் அருகில் தெப்பக்குளத்தில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது.அந்த சிலை மண்ணில் புதைந்த நிலையில், தலைப்பகுதி மட்டும், 2015ம் ஆண்டு வெளியே தெரிந்தது. இதையடுத்து கோவில் நிர்வாகம், அச்சிலையை மீட்டு பத்திரப்படுத்தாமல், சிலை மீது மண்ணை கொட்டி மூடினர்.அதன்பின், பருவமழையின்போது, குளத்தில் தண்ணீர் தேங்கியதால், சிலை இருந்த இடம் தெரியவில்லை. தற்போது, குளம் வற்றியுள்ளதால், அச்சிலையின் தலைப்பகுதி மட்டும், மீண்டும் வெளியே தெரிகிறது.இக்குளத்தை சிறுவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இச்சிலை மேலும், சிதிலமடையும் நிலை உள்ளது. எனவே, இச்சிலையை மீட்டு, அருங்காட்சியகத்தில் வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.