விருதுநகர்: 300 ஆண்டுகளுக்கு முன் புங்கை மரங்கள் நிறைந்த விருதுபட்டி எனும் விருது நகரில் கோட்டைப்பட்டி எனும் கிராமம் இருந்தது.
இங்கு வேளாண்குடி தேவேந்திரகுல மக்கள் கணிசமாக வாழ்ந்தனர். இவர்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டிருந்தனர். இவர்களது வசிப்பிடம் அருகே குளம் இருந்தது. அதையே பெரும் நீராதாரமாக கொண்டு விவசாயம் செய்து வந்தனர்.
இதனால் குளத்தின் அருகே வழிபாட்டு தலம் அமைக்க எண்ணினர். சிறு சிலை வடிவம் செய்து அதற்கு வேளாண் தொழிலுக்கு ஆதார தெய்வமான மாரியம்மன் என பெயரிட்டனர்.
மாரியம்மனை வழிபட்டு சிறப்படைந்த அப்பகுதி மக்கள் வழிபாட்டு தலத்தை கோயிலுமாக்க விரும்பினர். அதே காலகட்டத்தில் சோலைக்கு டும்பன் என்பவர் காளியம்மனுக்கு ஒரு கோயில் உருவாக்குவதற்காக, ஆண்டிபட்டி கணவாயில் பிரபலமாகி இருந்த வனபத்திர காளியம்மன் கோயிலில் பிடிமண் எடுத்து வந்து மாரியம்மன் கோயிலுக்கு அருகில் காளியம்மன் கோயிலை கட்டினார்.
அவரது வழிதோன்றல்கள் தற்போது காளியம்மன் கோயிலை புதுப்பித்து கல்கட்டடமாக கட்டி உள்ளனர். இது முழுக்க கல்லிலே கட்டப்பட்டுள்ள கட்டடம். 2013 முதல் கட்டட பணிகள் துவங்க விருதுநகர் காந்திபுரம் தெருவில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த வாரம் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோயில் வளாகத்தில் விநாயகர், காளியம்மன், முருகன், வள்ளி, தெய்வானை விஷ்ணு துர்க்கையம்மன், காலபைரவர், ஆஞ்சநேயர் சன்னதி தெய்வங்களும் வீற்றிருக்கின்றன. தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. அம்மனை வழிபட்டு சென்றால் வாழ்வில் சிறப்பு பெறலாம்.
கோயில் ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன், “முதலில் பீடமாக இருந்து அருள்பாலித்த அம்மன் 2013ல் துவங்கப்பட்ட கோயில் புதுப்பித்தல் பணிகள் மூலம் தற்போது கல் கட்டடத்தில் அருள்பாலிக்கிறாள். காளியம்மன் வேண்டுவோரின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வல்லமை மிக்கவள். காளியம்மனுக்கு என பக்தர்கள் உலகெங்கும் பரவி வாழ்கின்றனர். தற்போது விருதுநகரில் புதிய அமைப்பில் காட்சி தருவதை கண்டு அவர்கள் மனம் மகிழ்கிறார்கள். அம்மனின் விக்கிரக அமைப்பு கருணையும், இரக்கமும் ஒருசேர காட்சி தருகிறது, ” என்றார்.