தேவாரம்: வாழும் வாழ்க்கை ஒருமுறை தான். அடுத்து வரும் தலை முறையினர் புகழும் விதமான செயல்களை செய்வதே லட்சியமாக கொண்டு நம் முன்னோர்கள் வாழ்ந்தனர். இதன் பலனாக பல நூறாண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் கோயில்களை உருவாக்கினார்கள். இதை பாதுகாப்பது நமது கடமை.
தேவாரம் சின்னதேவி கண்மாயின் கீழ்பகுதியில் பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த அவனாசி ஈஸ்வரன் கோயில் உள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக பராமரிப்பின்றி உருக்குலைந்து கிடந்த இந்த கோயிலை, அவனாசி ஈஸ்வரர் அறக்கட்டளையிட்டனர். பழமை மாறாமல் புதுப்பித்துள்ளனர். இதன் மூலம் ஒற்றுமையை உணர்த்தும் ஊர் கூடி தேர் இழுப்போம் என்ற பழமொழி உண்மையாகியுள்ளது.
அறக்கட்டளை பொருளாளர் நாகநாதன் கூறுகையில், "அரிய பல கற்சுவர் சிற்பங்களை உள்ளடக்கிய இந்த கோயில் சீரமைக்கப்பட்ட வேண்டும் என்று ஆன்மிக பெரியோர் விரும்பினர். அறநிலையத்துறை மூலம் பணிகள் மேற்கொள்ள எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தனியார் நன்கொடையுடன் கோயில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கோயில் எவ்வாறு கட்டப்பட்டதோ, அதில் எவ்வித மாற்றமும் செய்யாமல் மீண்டும் கட்டுவது பெரும் சவாலாக இருந்தது. இவ்விதமான சீரமைப்புகளில் கைதேர்ந்த ஆந்தோணி ராஜ் என்ற சிற்பியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில் கற்களை பெயர்த்தெடுக்கும் போது, சேதமடைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியில்லாத காலத்திலேயே, மறு கட்டுமானம் செய்வதற்கு வசதியாக கற்களை வெகு நேர்த்தியாக அடுக்கி கோயிலை அமைத்துள்ளனர்.
பழைய கோயில் கட்டுமானத்தை பிரித்தெடுக்கும் போது, சமனில்லாத கற்களை கொண்டு கோயில் எழுப்பிய தமிழர்களின் தொன்மையான கட்டட கலை வியக்க வைத்தது. அரிய பொக்கிஷமான இம்மாதிரி கோயில்களை மறு சீரமைப்பு செய்து காப்பது நம் கடமை,” என்றார்.