பதிவு செய்த நாள்
27
ஜூன்
2019
02:06
ஈரோடு: செல்வ மாரியம்மன் கோவில் விழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு, பெரிய சேமூர் பொன்னி நகரில் செல்வ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தாண்டு குண்டம் விழா கடந்த, 18ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. பின்னர், கம்பம் நடப்பட்டது. ஏராள மான பக்தர்கள், கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டு வந்தனர். 20ல் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம்(ஜூன்., 25ல்) காலை, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டனர். நேற்று (ஜூன்., 26ல்) காலை, கோவில் தலைமை பூசாரி ஆறுமுகம் முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பெண்கள், ஆண்கள் கை குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஜூன்., 27ல்) கம்பம் ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்ச்சியும் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. நாளை (ஜூன்., 28ல்) மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.