வடலூர் வள்ளலார் கோயில் திருப்பணியை வாரியார் தலைமையேற்று செய்து கொண்டிருந்தார். வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லாமல் தன் நகைகளை 3500 ரூபாய்க்கு அடகு வைத்து கூலி கொடுத்தார். வடலூர் வள்ளலாரை வழிபட வந்த ராஜமாணிக்கம் என்னும் செல்வந்தரிடம், உங்கள் ஊரில் சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்து கோயில் திருப்பணிக்கு உதவுங்கள், என்று கேட்டுக் கொண்டார். அவரும் ஏற்பாடு செய்து முடித்தார். அன்றோ மழை கடுமையாகப் பெய்தது. இருந்தாலும், மழைநின்றவுடன் தென்னங்கீற்றுகளை பரப்பி, அதில் அமர்ந்து மக்கள் வாரியார் பேச்சைக் கேட்டனர். விழா முடிந்ததும், ராஜமாணிக்கம் ஒரு வெள்ளித்தட்டில் நிறைய சாத்துக்குடி, வாழைப்பழங்கள், வெற்றிலைபாக்கு வைத்து வாரியாரிடம் கொடுத்தார். வழக்கமாக ஐநூறு தருவதை ஆயிரமாகப் பெறவேண்டும் என்று வாரியார் எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால், தட்டில் நூறு ரூபாய் நோட்டுகள் கற்றையாக இருந்தன. அதை எண்ணிப் பார்த்த வாரியாருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதில் 3500 ரூபாய் இருந்தது. அடமானம் வைத்த அதே தொகை கிடைத்தது ஆண்டவனின் திருவருள் என்கிறார் வாரியார்.