ஒருசமயம் வாரியார் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு நபர், துண்டு பிரசுரம் ஒன்றை அவரிடம் நீட்டி, நாங்கள் வடலூரில் வள்ளலார் கோயில் திருப்பணி செய்து கொண்டிருக்கிறோம். வாரியாரின் கட்டளைப்படி இதில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு ஏதாவது பெரிய அளவில் நன்கொடையை வழங்குங்கள், என்று பணிவோடு கேட்டான். தான் வாரியாரிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற விஷயமே அவனுக்குத் தெரியாது. வாரியாரும் அவனிடம், ரொம்ப நல்லது. வாரியார் சுவாமிகள் இப்போது எங்கிருக்கிறார்? என்று கேட்டார். சுவாமிகள் நாளுக்கு ஒரு ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கிறார். நாங்கள் அவருடைய ஆட்கள் தான், என்று சொன்னான். ரயிலில் வாரியாருடன் இருந்த அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர். விஷயத்தைத் தெரிந்து கொண்ட அவர், தன்னைக் காத்துக் கொள்ள உடனே அவ்விடத்தை விட்டு மெல்ல நழுவினார். ஆன்மிகத்தின் பெயராலும்,உலகில் இப்படி ஏமாற்றுவித்தை நடக்கிறதே, என்று வாரியார் வருந்தினார்.