பதிவு செய்த நாள்
03
ஜூலை
2019
11:07
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், மூலவரைத் தரிசிக்க, நேற்று முன்தினம், போலீசார் தடையாக இருந்ததாக, நம் நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மூலவரைத் தரிசிக்க, எளிதான வழிகள் நேற்று ஏற்படுத்தப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில், அத்தி வரதர் வைபவம், நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், அத்தி வரதரை வணங்கினர். நேற்று முன்தினம் இரவு, வரிசையில் நின்றிருந்த பல பக்தர்கள், மயங்கி விழுந்துள்ளனர். மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். இதன் காரணமாக, வரிசையில் நிற்கும் பக்தர்கள் அருகிலேயே, மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் மூலவரை தரிசிக்கச் சென்ற பக்தர்கள், போலீசாரால் தடுக்கப்பட்டனர்.
இது குறித்து, நேற்றைய, நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியானது.இந்நிலையில், நேற்று, மேற்கு, கிழக்கு கோபுரம் என, இரு வழிகளிலும் மூலவரைத் தரிசிக்க, தனி வழி அமைத்து, கலெக்டர் பொன்னையா ஏற்பாடு செய்திருந்தார்.நேற்று முன்தினம் இரவு வரை வசூலிக்கப்பட்டு வந்த, 50 ரூபாய் கட்டணம், ரத்து செய்யப்பட்டதால், பொது வழியிலேயே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம், 50 ரூபாய் கட்டண தரிசனத்தில், 18 ஆயிரத்து, 927 பேர் வந்திருப்பதாக, கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது. இதன் மூலம், 9 லட்சத்து, 46 ஆயிரத்து, 350 ரூபாய் வசூலாகி உள்ளது. இலங்கை அமைச்சர், செந்தில் தொண்டைமான், இந்து முன்னணி நிறுவனத் தலைவர், ராமகோபாலன் ஆகியோர் நேற்று, அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.கலெக்டர் பொன்னையா, வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., நாகராஜன் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக கோவிலில் ஆய்வு நடத்தினர்.