பதிவு செய்த நாள்
06
ஜூலை
2019
12:07
கொடைரோடு: புதுக்கோட்டை மாவட்டம், வலையபட்டி ஆன்மிகக்குரு பச்சைக்காவடி, 76. இவரது தலைமையிலான குழுவினர் 12 முறை ராமேஸ்வரம்-, காசி பாதயாத்திரை சென்றுள்ளனர். அறுபடை வீடு தரிசனத்திற்கு 4 வது முறையாக இயற்கை இடர்பாடு இல்லாத சமுதாயம் கோரி, பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஜூன் 7-ல் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் துவங்கிய யாத்திரை, அறுபடைவீடுகளில் தரிசனம் செய்ய 63 நாட்கள் ஆயிரத்து 150 கி.மீ., நடக்க உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு வந்த தலைமை சாது பச்சைக்காவடி கூறியதாவது: தேனி மழை என்ற இயற்பெயரை 16 வயதில் பழநியில் நடந்த பச்சைக்காவடி விழாவில் இருந்து மாற்றினேன். இயற்கைக்கு முரணான பழக்கங்கள், திருமணம், வாழ்வியலில் எதிர்மறை சக்தியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கலாசாரம், பாரம்பரிய வாழ்க்கை முறையுடன், உயிர்களுக்கு இயற்கை இடர்பாடு இல்லாத சமுதாயத்தை வலியுறுத்தி இப்பயணம் நடக்கிறது.26 பேர் இருந்த இக்குழுவில் தற்போது 15 பேர் உள்ளனர். பெரும்பாலோர் 70 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள்தான். தினமும் நள்ளிரவு 1:00 மணி துவங்கி 6 மணிநேரம் நடக்கிறோம். உணவு, ஓய்வுக்கு நேரம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைவரும் ஒரே உத்வேகத்துடன் நடக்கிறோம். பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்துாருக்குப்பின், பழநி, சுவாமிமலை முடித்து 63 வது நாள் ஆக., 8 ல் திருத்தணி கோயில் தரிசனத்துடன் யாத்திரை நிறைவு பெறும், என்றார்.