பதிவு செய்த நாள்
06
ஜூலை
2019
01:07
பெரியகுளம்: பெரியகுளம் வராகநதி கரையோரம் உள்ள ஞானாம்பிகா சமேத காளஹஸ்தீஸ் வரர் கோயில் மிகத் தொன்மையானது. திருப்பதி அருகே காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இந்த கோயில் உருவானது. மூலவர்களான காளஹஸ்தீஸ் வரர் - ஞானாம்பிகை, பரிகார தெய்வங்களாக ராஜ கணபதி, கார்த்திகேயன், விஷ்ணு கணபதி, துர்கா, லட்சுமி, சரஸ்வதி, வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்பிரமணியன், நடராஜர் உள்ளிட் டோர் உள்ளனர். நவக்கிரஹம், சூரியன், சந்திரன், நத்தீஸ்வரர்கள் மற்றும் ராகு, கேதுவிற்கு தனி சன்னதி உள்ளது.
தென்மாவட்டங்களில் இந்த கோயிலில் சிவலிங்கத்தில் விநாயகர் உள்ளார். பிரசித்திப் பெற்ற இந்த கன்னிமூல கணபதிக்கு கடந்த ஜனவரியில் கும்பாபிஷேகம் நடந்தது.
கோயிலில் நுழைந்தவுடன் பக்தர்கள் வணங்கும் முதல் தெய்வமாக செல்வத்து அதிபதியாக, மாப்பிள்ளை விநாயகராகவும் அழைக்கப்படுகிறார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இவரை வணங்கினால் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்யம் கிட்டும். சகல ஐஸ்வர்யம் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தியன்று அருகம்புல்மாலை அணிவிப்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
தினமும் காலை 7:00 மணி முதல் காலை 11:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடை திறந்திருக்கும். இரு வேளை பூஜை நடந்து வருகிறது.
பிரதோஷ சிறப்பு வழிபாடும், தேய்பிறை அஷ்டமியன்று சேத்ரகால பைரவருக்கு
ஹோமத்துடன் பூஜை நடக்கிறது. சதுர்த்தி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை உள்ளிட்ட விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், ராகு, கேதுவுக்கு நாகதோஷம், செவ்வாய் தோஷம் பரிகார பூஜையும் நடக்கிறது.
அர்ச்சகர் கணேசன் கூறியதாவது: சிவலிங்கத்திற்குள் உள்ள விநாயகரை தரிசிப்பதற்கு தென்மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். குழந்தை பாக்யம் பெறுவதற்கு தம்பதிகள், தேங்காயில் எண்ணெய் விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கர்ப்ப காலத்தில் அன்னை வயிற்றில் குழந்தை இருப்பது போன்ற அமைப்பில் சிவலிங்க வயிற்று பகுதியில் விநாயகர் சாந்த சொரூபனாக காட்சியளிக்கிறார், என்றார்.
விபரங்களுக்கு: 99407 85335