பதிவு செய்த நாள்
08
ஜூலை
2019
01:07
பி.வி.களத்தூர்: பொன்விளைந்தகளத்தூரில், பிடாரி மல்லிச்சி அம்மன் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா, நேற்று (ஜூலை., 7ல்), நடைபெற்றது.
செங்கல்பட்டு அடுத்த, பொன்விளைந்தகளத்தூர் கிராமத்தில், பிடாரி மல்லிச்சி அம்மன் கோவில், ஹந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில், திருப்பணி, மூன்று ஆண்டுகளுக்கு முன், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், துவங்கி, நடைபெற்று வந்தது.சில நாட்களுக்கு முன், திருப்பணிகள் நிறைவடைந்தன.
அதைத் தொடர்ந்து, கும்பாபிஷேக விழா, 5ம் தேதி, கணபதி பூஜையுடன் துவங்கி, பல்வேறு யாக பூஜைகள் நடந்தன. அதன்பின், நேற்று (ஜூலை., 7ல்), காலை, 7:00 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவும், சுவாமிக்கு, மஹா அபிஷேகமும், நடைபெற்றது.
இதில், பொன்விளைந்தகளத்தூரை சுற்றியுள்ள, கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை, 4:00 மணிக்கு, கோவில் அருகில், பெண்கள் பொங்கல் வைத்தனர். 48 நாட்களுக்கு, மண்டலாபிஷேகம் நடைபெறும்.