பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
11:07
பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் உள்ள பழமையான நவபாஷாண மூலவர் சிலையை சுரங்கம் தோண்டி, மரப்பெட்டியில் வைத்து கடத்த 2004 முதல் 2006 வரை நடந்த சதி திட்டத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். பழநி கோயிலில் உள்ள நவபாஷாண முருகன் சிலை போகர் சித்தரால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 2004ல் சிலையை மறைத்து 200 கிலோ எடையில் ஐம்பொன் உற்ஸவர் சிலையை வைத்தனர். அதில் தங்கம், வெள்ளி சேர்க்கப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக 2018ல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு புகார் சென்றது.
உயர் அதிகாரிகள் கைது: விசாரணையில் ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் கே.கே.ராஜா, ஆணையர் தனபால், அறநிலைய இணை ஆணையர்கள் புகழேந்தி, தேவேந்திரன் கைதாகினர். தற்போது நவபாஷாண சிலையை கடத்த 2004ல் சதித் திட்டம் தீட்டப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நவபாஷாண சிலையை மறைத்து உற்ஸவர் சிலையை வைத்து காலப்போக்கில் அதை கடத்துவதற்கு கூட்டுச்சதி நடந்துள்ளது. கடந்த 2004ல் ஐம்பொன் சிலை வைத்து சில மாதங்களில் அகற்றியது, 2006ல் ஆண்டில் அவசரமாக கும்பாபிேஷகம் செய்து 24 நாட்கள் கருவறையை பூட்டியது போன்றவை சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளன.
கருப்பாக்க திட்டம்?: தலைமை ஸ்தபதி முத்தையா திருப்பணிகளில் அதிக அனுபவம் உள்ளவர். ஐம்பொன் சிலையில் உரிய விகிதத்தில் உலோகங்களை பயன்படுத்தவில்லை. வெள்ளி, தங்கம் குறிப்பிட்ட அளவில் சேர்க்கவில்லை எனில், நவபாஷண சிலைமுன் வைக்கும்போது சில மாதங்களில் கருமையாகி விடும். நவபாஷாண சிலையை கடத்த திட்டமிட்டே ஐம்பொன் சிலையை செய்தது விசாரணையில் தெரிந்துள்ளது.செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய் பரிகார தலம் பழநி கோயில். கடந்த 2004ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு செவ்வாய் கிரகம் சாதகமாக இல்லை பதவிக்கு ஆபத்து என கேரள ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் கூறினார். இதனால் நவபாஷாண சிலையை மறைத்து, இரவோடு இரவாக ஆகம விதிகளை மீறி மூலவர் சிலை போன்றே ஐம்பொன்சிலையை பிரதிஷ்டை செய்தனர். அப்போது நடக்க இருந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்லுார் சிவாச்சாரியர் முன்னிலையில் ஐம்பொன்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
பக்தர்கள் எதிர்ப்பு: ஆகமவிதிப்படி கருவறைக்குள் இரண்டு மூலவர்கள் இருக்கக் கூடாது. இதுகுறித்து திருமூலர் தனது திருமந்திரத்தில், தாவர லிங்கம் பரித்தோன்றில் தாபித்தால் ஆவது முன்னே அரசுநிலை கெடும், சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் எனக்கூறியதை மேற்கோள்காட்டி பக்தர்கள் போராட்டம், கடைஅடைப்பு நடத்தினர்.ஆனால் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. அப்போது இணைஆணையர் பதவியில் இருந்த கே.கே.ராஜா இடமாற்றம் செய்யப்பட்டார். சில நாட்களிலேயே புதிய நிர்வாக அதிகாரி சுந்தரம் முன்னிலையில் ஜூன் 7ல் கருவறைக்குள் வைக்கப்பட்ட ஐம்பொன்சிலை அகற்றப்பட்டது. நவம்பரில் பழநி முருகன்கோயிலில் ஜெ., சுவாமிதரிசனம் செய்தார். பின் அறங்காவலர்குழு தலைவராக எஸ்.வி.பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டார்.
அவசரமாக நடந்த கும்பாபிஷேகம்: சிறிதுகாலம் அமைதியாக இருந்த அரசு மீண்டும் 2006 சட்டசபை தேர்தலில் வெற்றிக்காக உன்னிகிருஷ்ண பணிக்கரின் ஆலோசனையின்படி பழநி கோயிலில் திடீர் கும்பாபிஷேகம் நடத்துவதாக அறிவித்தது. 2000ம்ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்த கும்பாபிஷேகம் 2012ல் தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் திடீரென 24நாட்களில் திருப்பணிகளை அவசரமாக முடித்து கும்பாபிஷேகம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஸ்தபதி பின்னணியில் யார்: இதுகுறித்து ஞானதண்டாயுதபாணி சுவாமி பக்தர் பேரவை செந்தில்குமார் கூறியதாவது: 2006ல் கும்பாபிஷேகத்தின் போது 24 நாட்கள் கருவறையை பூட்டி திருப்பணி நடந்தது. அந்நாட்களில் முருகனின் வேல் உருவத்தை பக்தர்கள் வணங்கினர். இவ்வளவு பெரிய கோயிலில் ரகசியமாக இரவு முழுவதும் திருப்பணிகள் செய்து குழிதோண்டினர். பெரிய மரப்பெட்டியும் கொண்டு வந்தனர். அதன் நோக்கம் என்ன அப்போதே கேள்வி எழுப்பினோம். சுரங்கம்தோண்டி பெட்டியில் வைத்து நவபாஷாண சிலையை கடத்த முயற்சி நடந்திருக்க வேண்டும் என சந்தேகப்பட்டோம். அது தற்போது உறுதியாகியுள்ளது. அப்போதைய செயல் அலுவலர் சுந்தரம், அறங்காவலர்குழு தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம், உன்னிகிருஷ்ண பணிக்கர், அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமியிடமும் விசாரணை நடத்த வேண்டும், என்றார்.
பழுதான நாதமணி கோயில்: வெளிப்பிரகாரத்தில் 300 கிலோ எடையுள்ள நாதமணியின் 25கிலோ எடையுள்ள நாக்கு கழன்று 2004ல் விழுந்தது. இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதற்கு மூலவரை மறைத்து ஐம்பொன் சிலை வைத்ததுதான் காரணம் என பக்தர்கள் கூறினர். கடந்த 2018 ஜூலை 11ல் பழநி மலைக்கோயிலில் சிறப்பு பூஜை செய்து டபுள்லாக்கரில் உள்ள ஐம்பொன்சிலை சிலையை எடையிட்டு வீடியோவில் பதிவுசெய்தனர். சிலையின் எடை 221.100 கிலோவும், உயரம் 111 செ.மீ., இருந்தது. சிலை கடத்தல் தடுப்புபிரிவு கூடுதல் எஸ்.பி., ராஜாராம் குழுவினர் அதை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, திருநாகேஸ்வரம் திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.