பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
11:07
ஈரோடு: ஈரோடு, கபாலீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா, கோலாகலமாக நடந்தது. நடராஜ பெருமானுக்கு, ஆண்டுக்கு ஆறு அபிஷேகம் நடக்கும். இதில் மார்கழி ஆருத்ரா தரிசனம், ஆனியில் நடக்கும் ஆனி திருமஞ்சனம் கூடுதல் விசேஷம் கொண்டது.
இதன்படி, ஆனி உத்திர நட்சத்திரமான நேற்று, திருமஞ்சன விழா, நடராஜர் சன்னதி உள்ள, அனைத்து கோவில்களிலும், சிறப்பாக நடந்தது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ஆனித்திருமஞ்சன விழா, கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை, நடராஜர் சன்னதியில் கணபதி பூஜை, அதை தொடர்ந்து, 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. பூர்ண அலங்காரத்தில் காட்சியளித்த தில்லை நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோரை, பல்லக்கில் சுமந்தபடி, தோளில் சுமந்த பக்தர்கள், வெள்ளி சப்பரத்தில் வைத்து திருவீதியுலா புறப்பட்டனர். மணிக்கூண்டு, பி.எஸ்.பார்க், பிரப்ரோடு, காமராஜர் வீதி வழியாக, கோவிலில் நிறைவு பெற்றது. வீதியுலாவின்போது, வழிநெடுகிலும் நின்ற பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர்.
பச்சமலை, பாரியூர் கோவிலில்...: கோபி பச்சமலையில், நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு மகா ?ஹாமம் மற்றும் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதேபோல், பாரியூர், அமரபணீஸ்வரர் கோவிலில், ஆனித் திருமஞ்சன உற்சவ விழா, நேற்று காலை நடந்தது. நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு, மகன்யாச அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் கோபி, வெள்ளாளபாளையம், முருகன்புதூர், மேட்டுவலவு, புதுப்பாளையம் பகுதி மக்கள், திரளாக கலந்து கொண்டனர்.