பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
12:07
அரூர்: அரூரில், ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, வாணீஸ்வரி அம்பாள் உடனுரை வாணீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. பின்னர், 9:00 மணிக்கு, வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, சுவாமிக்கு சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, 10:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது.
* ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவிலில், நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு, ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில், ஆடல் வல்லானுக்கு மகா அபிஷேகம் மற்றும் தங்கக்கவசம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. காலை, ஒன்பது மணிக்கு, ஆனந்த நடராஜருக்கு, பால், தயிர், நெய், பழம், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆனி திருமஞ்சன தரிசனம் நடந்தது. நேற்று இரவு, ஏழு மணிக்கு, ஆபரண அலங்கார காட்சியும், அம்மையப்பனின் நடனதிருவீதி உலா மற்றும் கோபுர தரிசன கைலாய காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை, ஆனி திருமஞ்சன விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.