பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
01:07
காஞ்சிபுரம்:அக்னி வசந்த விழா நிறைவையொட்டி, பஞ்சுபேட்டை திரவுபதியம்மனுக்கு, 551 பால்குட அபிஷேகம் நடந்தது.
பெரிய காஞ்சிபுரம், பஞ்சுபேட்டை பெரிய தெரு, பாண்டவ சமேத திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த உற்சவம், ஜூன், 9ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும், பகல், 2:00 மணிக்கு மகாபாரத சொற்பொழிவும், 20ம் தேதி முதல், இரவு, 9:00 மணிக்கு, மஹாபாரத தெருக்கூத்து நாடகமும் நடந்தது.அக்னி வசந்த விழா நிறைவையொட்டி, கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து, 551 பக்தர்கள், பால்குடம் சுமந்தபடி, ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது.
சித்தேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை கிராமத் தில் சிவசக்தி சித்தேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் வரசித்தி விநாயகர், பக்த ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வார் ஆகிய புதிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகளுக்கான மஹா கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் (ஜூலை., 7ல்), கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில், மூன்று யாக சாலைகள் அமைத்து, பூஜைகள் நடந்தன. நேற்று (ஜூலை., 8ல்),, காலை, 9:00 மணிக்கு, கலச ஊர்வலம் நடந்தது. பின், கோவில் வளாகத்தில் அமைந்த விநாயகர், கருடர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு, கலசநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இதில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.