பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
01:07
திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் குளத்தில், தண்ணீர் இல்லாததால், டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்புங்கள் என, கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா, இம்மாதம், 24 - 28ம் தேதி வரை நடக்கிறது.
இதில், 26 - 28ம் தேதி வரை, மூன்று நாட்கள், சரவணபொய்கை என்கிற திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.தற்போது, திருக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், கோவில் நிர்வாகம் ஒப்பந்தம் அடிப்படையில் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து விடும் பணியை, 2ம் தேதி முதல், துவங்கியுள்ளது. நேற்று (ஜூலை., 8ல்) வரை, 300க்கும் மேற்பட்ட டிராக்டர், தண்ணீர் குளத்தில் விட்டும் போதிய தண்ணீர் இல்லாததால், தெப்பம் கட்டும் பணி நடக்கவில்லை.
இந்நிலையில், கோவில் நிர்வாகம், தெப்பத் திருவிழா நடத்துவதற்கு, பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கை செலுத்தி, டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குளத்தில் விடுவ தற்கு, உதவ வேண்டும் என, அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு, கோவில் நிர்வாகம் சார்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இருப்பினும், தெப்பம் கட்டுவதற்கும், மூன்று நாள் தெப்பத் திருவிழா நடத்துவதற்கும், போதுமான தண்ணீர் குளத்தில் இல்லாததால், பக்தர்கள் முன்வந்து டிராக்டர் மூலம் தண்ணீரை காணிக்கையாக கொண்டு வந்து குளத்தில் விட வேண்டும்.
இதுதவிர, பக்தர்கள் தண்ணீருக்காக காணிக்கையாக பணம் கொடுத்தாலும், நாங்கள், டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பிக் கொள்கிறோம்.
பக்தர்கள் செலுத்தும் காணிக்கைக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் உரிய ரசீது சம்பந்தப்பட்ட பக்தர் பெயரில் வழங்கப்படும்.எனவே, பக்தர்கள் குளத்தை தண்ணீர் கொண்டு வந்து நிரப்பு வதற்கு, தாராளமாக உதவ முன்வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.