சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் தெப்பத்தை தூர்வாரி பராமரிக்க அறநிலையத்துறை முன்வர வேண்டும்.
செப்பேடு புகழ் சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் முன்புறம் தெப்பம் உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலை போல ஆறுகால பூஜை இங்கு நடைபெறுகிறது.
தை பூசத்தன்று வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்ப திருவிழாவை போன்று, இந்த தெப்பத் திலும் சுவாமி, அம்மன் சுற்றி வரும் நிகழ்வு விமர்சையாக நடத்தப்படும். சில ஆண்டுகளாக தெப்ப திருவிழா நடைபெறவில்லை. தெப்பமும் பராமரிப்பின்றி கிடந்தது. கடந்தாண்டு சமூக ஆர்வலர் மது தெப்பத்தை தூர்வாரி தூய்மைப்படுத்தினார். பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்பட்ட போது, இந்த தெப்பமும் நிறைந்தது.
பின்னர் உரிய பராமரிப்பில்லாததாலும் குப்பை கொட்டும் இடமாக மாறி விட்டது. பக்தர்கள் கூறுகையில் ‘பெருமாளின் வேண்டுகோளை ஏற்ற சிவன் கோயில் முன்புறம் சிவகங்கை தெப்பத்தை உருவாக்கியதாக புராண கால தகவல் உள்ளது. தென்மேற்கு பருவமழை வலுவடையும் முன் தெப்பத்தை பராமரித்தால், பெரியாறு அணை நீர் திறக்கப்படும் போது நிறைக்கலாம், ‘என்றனர்.