பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
02:07
சேலம்: சேலத்தில், பக்தர்கள் கோஷம் முழங்க, கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகை முகூர்த்தக்கால் நேற்று (ஜூலை., 8ல்) நடப்பட்டது.
சேலத்தில், 18 பட்டிக்கும் காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் கோட்டை பெரியமாரியம்மன் கோவிலில், ஆடிப்பெருவிழாவையொட்டி, வளர்பிறை, சஷ்டி திதியான நேற்று (ஜூலை., 8ல்), முகூர்த்தக்கால் நடப்பட்டது.
காலை, 5:00 மணியளவில், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், 16 அடி உயர மூங்கி லுக்கு மஞ்சள், குங்குமம் பூசி, மாவிலை, பூக்கள் சகிதமாக, வேத விற்பன்னர்கள், மந்திரங்கள் ஓதி, சிறப்பு பூஜையுடன் காலை, 7:00 மணிக்கு பழைய சன்னதி நேர் எதிரே, முகூர்த்தக்கால் நடப்பட்டது.
அப்போது, திரண்டிருந்த பக்தர்கள், அகிலாண்ட நாயகியே, மாரியம்மா, ஓம் சக்தி தாயே என, மெய் சிலிர்க்க முழக்கமிட்டனர். அதன்பின், வரிசையில் நின்று தரிசனம் செய்து திரும்பினர். வரும், 23ல், பூச்சாட்டுதல், ஆக.,5ல், சக்தி அழைப்பு, 7, 8, 9ல், பொங்கல் வைபவம், மாவிளக்கு பிரார்த்தனை செய்தல், 13, காலை, 10:00 மணியளவில் பால்குட ஊர்வலம், அபிஷேகம், அலங்கார ஆராதனை நடக்கிறது.