ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டு 61 அடி உயர தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.
ரிஷிவந்தியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடந்தது.
கடந்த 12ம் தேதி அர்த்தநாரீஸ்வரர் சுவாமிக்கும், முத்தாம்பிகை அம்மனுக்கும் திருக்கல் யாண உற்சவம் நடந்தது.நேற்று (ஜூலை., 14ல்) தேர்திருவிழாவை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகத்துடன் உச்சிகால பூஜைகள் நடந்தது.
பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர்.சர்வ அலங்காரத்துடன் புறப்பட்ட பஞ்ச மூர்த் திகளுக்கு கோவில் முன்பு கந்தவிலாஸ் ஜெயக்குமார் தலைமையில் மண்டகப் படி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஐகோர்ட் நீதிபதி ரவிச்சந்திரபாபு கலந்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட 61 அடி உயர தேரில் சுவாமியை வைத்த பின்னர் முருகமூப்பர் வகையறாவினர் தலைமையில் தேரடியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.மாலை 3:15 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் ஏராளமான பக்தர்கள் ’அரோகரா’ கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
நான்கு மாடவீதிகள் வழியே தேர் அசந்தாடி சென்றது.தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு தேர் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.இன்று (ஜூலை., 15ல்) தீர்த்தவாரி உற்சவமும், நாளை விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. திருக்கோவிலுார் டி.எஸ்.பி., மகேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.