பதிவு செய்த நாள்
24
ஜூலை
2019
02:07
ஓசூர்: ராயக்கோட்டை, துர்க்கை மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் உள்ள கிருஷ்ணகிரி சாலையில், துர்க்கை மகா மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு கடந்த, 21ல் தீமிதி திருவிழா துவங்கியது.
அன்று இரவு சக்தி கரகம் அனுப்பும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் (ஜூலை., 22ல்) காலை கலச பூஜை, இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. நேற்று (ஜூலை., 23ல்) காலை, 5:00 மணிக்கு வஜ்ரநாதேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. 11:00 மணிக்கு தீமிதி விழா துவங்கியது. முதலில் உற்சவ மூர்த்தி சிலையை தோளில் தூக்கியவாறு, பூசாரிகள் தீ மிதித்து சென்றனர். தொடர்ச்சியாக ஆண், பெண் பக்தர் கள் மற்றும் குழந்தைகள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர், சுவாமி நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, இரவு, 7:00 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.