பதிவு செய்த நாள்
24
ஜூலை
2019
02:07
சேலம்: கோட்டை மாரியம்மன் உள்பட, அம்மன் கோவில்களில், ஆடித்திருவிழா பூச்சாட்டு தலுடன் தொடங்கியது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடித் திருவிழா பூச்சாட்டுதல் விழாவையொட்டி, நேற்று (ஜூலை., 23ல்) காலை முதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
இரவு, அம்மனுக்கு பூச்சாட்டப்பட்டு, பூஜையை தொடர்ந்து, பண்டிகை தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள், மாரியம்மனை வழிபட்டனர். ஆக., 5ல், சக்தி அழைப்பு, 7ல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம், 8, 9ல், பொங்கல் வைத்தல், ஆக., 13ல், பால்குட ஊர்வலம், அன்னதானம் நடக்கவுள்ளது. மேலும், ஆக., 14ல், மஞ்சள் நீராடுதல் வரை, தினமும், சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கும். கோட்டை கோவில் பூச்சாட்டுதலுக்கு பின், குகை மாரியம்மன், காளியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், அம்மாபேட்டை பலபட்டரை மாரியம்மன், பொன்னம்மாபேட்டை மாரியம்மன் உள்பட எட்டுப்பட்டி மாரியம்மன் கோவில்களிலும், பூச்சாட்டப்பட்டு, திருவிழா தொடங்கியது. அதே போல், மாநகரிலுள்ள, 52 அம்மன் கோவில்கள், புறநகரிலுள்ள, 80க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்கள் மட்டுமின்றி, முனியப்பன் கோவில்களிலும் ஆடிப்பண்டிகை தொடங்கியுள்ளது.