’இறந்த முன்னோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம் செய்வது அவசியமா? அந்த நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் போதாதா?” என்று காஞ்சி மகாசுவாமிகளிடம் கேட்டார் பக்தர் ஒருவர். ” அன்னதானம் செய்ய வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லையே?” என்று சிரித்தார் சுவாமிகள். ”ஒன்றைச் செய்தால் இன்னொன்றைச் செய்ய வேண்டாம் என்பதல்ல. ஏழைகளுக்கு உதவுவது அவசியம். அதைப் போல சிரார்த்தம் செய்வது மிக அவசியம்” என்றார்.
’சிரார்த்தத்தில் வைக்கும் பிண்டத்தை முன்னோர் எப்படி ஏற்பர்? இது சாத்தியமா?” என்றெல்லாம் பக்தருக்கு பல சந்தேகங்கள். பார்வையாலே புரிந்து கொண்ட மகாசுவாமிகள் தொடர்ந்தார். ”உன் மகன் வெளியூரில் தங்கிப் படிக்கிறானே? அவனுக்காக ஒவ்வொரு மாதமும் மளிகை சாமான்களை இங்கிருந்து அனுப்புகிறாயா என்ன? பணம் தானே அனுப்புகிறாய்?”
’ஆமாம்’ என பக்தர் தலையசைத்தார். ” நீ மணியார்டர் பண்ணும் அதே பணமா அவனுக்கு போகிறது? இல்லையே! அந்த மதிப்புள்ள வேறு நோட்டைத் தானே கொடுக்கிறார்கள். பணம் அங்கே போய்ச் சேர, போஸ்ட் ஆபீசில் விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது அல்லவா? நாம் பண்ணுகிற திதி, திவசம், அமாவாசை தர்ப்பணம் எல்லாம் விண்ணப்பம் பூர்த்தி செய்வது போலத் தான். ரிஷிகள் வகுத்துக் கொடுத்த மந்திரம் மூலமாக நாம் கொடுக்கும் பொருட்கள் முன்னோரைச் சென்றடையும். ஹாஸ்டலில் இருக்கும் உன் மகனுக்குப் பணம் சேர்வது மாதிரி. அவனுக்கு நீ ஏன் பணம் அனுப்புகிறாய்? அவன் மீதுள்ள அக்கறை. முன்னோர் மீதும் அக்கறை வேண்டும். அவர்களிடம் நாம் நன்றியுடன் இருக்க வேண்டும். அதற்குத் தான் இந்த சிரார்த்தம். சிரத்தையாக(அக்கறை) செய்வதால் தான் ’சிரார்த்தம்’ என்றே பெயர். முன்னோரை ’தென்புலத்தார்’ என்கிறது தமிழ்மறையான திருக்குறள். அவர்களைக் காப்பது இல்லறத்தார் கடமை என்றும் சொல்கிறது. சிரார்த்தத்தில் மந்திரம் மிக முக்கியம். ரிஷிகள் சொல்லித் தந்த சூட்சுமம் அது. நம்பிக்கையோடு சிரார்த்தம் செய். முன்னோர் ஆசியால் நலமாக வாழ்வாய். ஏழைகளுக்கு அன்னதானமும் செய்!” என்றார் மகா சுவாமிகள். - திருப்பூர் கிருஷ்ணன்