தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், 1.41 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தேர் உருவாக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், ஆயிரம் ஆண்டு பழமை வாழ்ந்த கோவிலாகவும், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோவில், 5 தேர்கள் உள்ளன. மரத்திலான இத்தேர்கள், சேதமடைந்துள்ளதால், புதிய தேர்கள் செய்ய திட்ட மதிப்பீடு செய்யப்பட்ட அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதில், முதல் கட்டமாக, பட்டீஸ்வரர் தேரை, 1.41 கோடி ரூபாய் மதிப்பில், புதியதாக செய்ய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், புதிய தேர் செய்யும் பணியின் துவக்க விழா, நேற்று நடந்தது. இப்பணியை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று துவக்கி வைத்தார். கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், அர்ச்சகர்கள், சிறப்பு பூஜை செய்தனர். இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், துணை கமிஷனர் விமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்னும் ஒரு மாதத்திற்குள், மீதமுள்ள நான்கு தேர்களுக்கும், புதிய தேர் செய்யும் பணி துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.