நின்ற திருக்கோலத்தில் அத்தி வரதர்: குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2019 11:08
காஞ்சிபுரம்: காஞ்சி அத்தி வரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நீல நிற பட்டு உடுத்தி அருள் பாலிக்கும் அத்திவரதரை , இன்று(ஆக.,1) அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் ஜூலை 1ம் தேதி முதல் அத்தி வரதர் வைபவம் நடைபெறுகிறது. இதில் நேற்று(ஜூலை 31) வரை சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதர் இன்றில் இருந்து இன்று(ஆக.,1) முதல் ஆக., 17ம் தேதி வரை நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் காரணமாக நேற்று மாலை முதல் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. சயன கோலத்தில் அத்தி வரதரை தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நேற்று காலை தரிசனம் செய்தனர். இதுவரை 47 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர்.
நின்ற கோல அத்தி வரதரை தரிசிக்க அதிக பக்தர்கள் வருவர் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதல் ஆக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. பொது தரிசன வரிசையில் கூட்டம் அதிகம் இருந்தால் அவர்களை நிறுத்தி தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்ப வடக்கு மாட வீதியில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 10 ஆயிரம் பேர் தங்கலாம் எனவும் கூறியுள்ளது. கூட்டம் அலைமோதுகிறது: இந்நிலையில், இன்று நின்ற கோலத்தில் அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும், நின்ற திருக்கோலத்தில் அத்தி வரதரை காண காஞ்சியில் குவிந்துள்ளனர். கிழக்கு கோபுர வாசல் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.