சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள சிந்தாமணி விநாயகர், மகாலட்சுமி அம்மன், மகாவிஷ்ணு, சென்னப்பன், வீரபத்திரன் ஆகிய சுவாமிகளின் ஆடி மாத திருவிழா நடந்தது.
கடந்த ஆக. 3 அன்று மாலை விநாயகர் உள்ளிட்ட நவ மூர்த்தி தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனை நடந்தது. அன்று இரவு புராண நாடகம் நடைபெற்றது. நேற்று அதிகாலை அம்மன் சேர்வை ஆட்டத்துடன் அதிர்வேட்டு முழங்க, தேர்பவனி சென்று தண்ணீர் துறையில் நீராடி, தேங்காய் உடைத்து வீதிவழியாக அபிஷேகம் நடைபெற்று திருக்கோயிலை வந்தடைந்தது. இதை தொடர்ந்து அம்மன் கோயில் முன்பாக உள்ள கம்பத்தில் பூசாரி நெய்தீபம் ஏற்றி பாதக குரடேறி, கட்டரி அம்பு போட்டு தலையில் சக்தி தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து பெண் பக்தர்கள் பாரம்பரிய சாட்டைபடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை அம்மன் மற்றும் கருப்புசாமி கரகங்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்று அம்மன் கோயிலை அடைந்தது. சுற்றுப் பகுதியை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.