Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
4. மனிதனின் மூன்று நிலைகள் 6. ஆன்ம அனுபூதி
முதல் பக்கம் » பிரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி)
5. ஓங்கார தியானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2012
04:03

பிரச்ன உபநிஷதம் கூறுகின்ற சாதனைப் பகுதிக்கு வருகிறோம். உலகைப்பற்றி, உலகை இயக்குகின்ற பிராணனைப்பற்றி, மனிதனைப்பற்றிய ஆராய்ச்சிகளுக்குப் பிறகே சாதனைப் பகுதி வருகிறது. இது மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இந்த உபநிஷதத்தில் வருகின்ற 6 பேரும் இறை நாட்டம் உடையவர்கள், இறையுணர்வில் நிலைபெற்றவர்கள்(1:1). அவர்கள் உதவிக்காக நாடிய பிப்பலாதர் தெய்வமுனிவர்(1:1). அவர்கள் உலகைப்பற்றியும் மனிதனைப்பற்றியும் ஆராய்ச்சி செய்கிறார்கள். இறை வாழ்வு, ஆன்மீக வாழ்வு, அல்லது தெய்வீக வாழ்வின் ஓர் அடிப்படை நிபந்தனையை இங்கே நாம் காண்கிறோம். இறை வாழ்வை நாடுபவர்களுக்கு தன்னைப்பற்றி, தன்மீது செயல்படுகின்ற சக்திகளைப்பற்றிய அறிவு அத்தியாவசியமானது. அவற்றை அறிந்து அவற்றைச் சாதகமாக மாற்றியமைப்பதால் ஆன்மீக வாழ்வில் விரைந்து முன்னேறலாம் என்பது இங்கே உணர்த்தப்படுகிறது. எனவே உலகைப்பற்றியும் நம்மைப்பற்றியும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்த பிறகு சாதனைப் பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது உபநிஷதம். இந்த உபநிஷதம் காட்டும் சாதனை ஓங்கார தியானம்.

இறைவனைக் குறிப்பிட ஒரு சொல் இருக்குமானால் அது ஓம்( தஸ்ய வாசக ப்ரணவ- யோக சூத்திரங்கள், 1:27) என்கிறார் பதஞ்ஜலி முனிவர். இதனை விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்: இந்தச் சொல்லை அவர் (பதஞ்சலி முனிவர்) ஏன் வற்புறுத்திக் கூற வேண்டும்? கடவுளைக் குறிக்க நூற்றுக்கணக்கான சொற்கள் உள்ளன... எல்லா ஒலிகளும் பிறக்கக் கூடியதும் மிகவும் இயற்கையானதுமான ஓர் ஒலி இருக்கிறதா?ஆம் அத்தகைய ஒலி ஓம்.

ஓங்கார மந்திரத்தை ஜபிப்பது, அதனைத் தியானிப்பது போன்றவற்றைப் பொதுவாக நாம் அறிவோம். அது ஓங்கார தியானத்தின் சாதாரண பரிமாணம் மட்டுமே. அதற்கு உயர் பரிமாணம் ஒன்று உள்ளது. அதை இந்த உபநிஷதம் கூறுகிறது. பொதுவாக, ஓங்கார தியானமும் ஜபமும் ஒரு மனப் பயிற்சியாகச் செய்யப்படுகிறது. ஆனால் ஓங்கார மந்திரத்தின் உயர் பரிமாணம் கர்ம, பக்தி, ஞான யோகங்களையும் அவற்றின் சமரசத்தையும் உள்ளடக்கிய ஒரு வாழ்க்கை முறையாக விரிகிறது.

ஓங்கார தியானம்: இரண்டு பரிமாணங்கள் 1-2

1. அத ஹைனம் சைப்ய: ஸத்யகாம பப்ரச்ச
ஸ யோ ஹ வை தத்பகவன் மனுஷ்யேஷு ப்ராயணாந்தம்
ஓங்காரமபித்யாயீத கதமம் வாவ ஸ தேன லோகம் ஜயதீதி

அத ஹ-பிறகு; சைப்ய-சிபியின் மகனான; ஸத்ய காம-சத்தியகாமன்; ஏனம்-அவரிடம்; பப்ரச்ச-கேட்டார்; பகவன்-தெய்வ முனிவரே; மனுஷ்யேஷு-மனிதர்களில்; ஸ ய-யார்; ப்ராயணாந்தம்-வாழ்நாள் முழுவதும்; தத்-அந்த; ஓங்காரம்-ஓங்கார மந்திரம்; அபித்யாயீத-ஆழ்ந்து தியானிக்கிறானோ; ஸ-அவன்; தேன-அதனால்; கதமம்-எந்த லோகம்-நிலையை; ஜயதி-அடைகிறான்; இதி-என்று.

பொருள் : பிறகு சிபியின் மகனான சக்தியகாமன் பிப்பலாத முனிவரிடம் கேட்டார்; தெய்வ முனிவரே வாழ்நாள் முழுவதும் ஓங்கார மந்திரத்தை ஆழ்ந்து தியானிப்பவன், எந்த நிலையை அடைகிறான்?

2. தஸ்மை ஸ ஹோவாச
ஏதத் வை ஸத்யகாம பரம் சாபரம் ச ப்ரஹ்ம யதோங்கார
தஸ்மாத் வித்வான் ஏதேனைவ ஆயதனேன ஏகதரம் அன்வேதி

தஸ்மை-அவரிடம்; ஸ-முனிவர்; உவாச ஹ-கூறினார்; ஸத்யகாம-சத்தியகாமா; ஏதத் வை-இது; பரம்-உயர் நிலை; அபரம் ச-சாதாரண நிலை; ப்ரஹ்ம-இறைவன்; யத்-எது; ஓங்கார-ஓங்காரம்; தஸ்மாத்-எனவே; வித்வான்-மகான்; ஏதேன-இந்த; ஆயதனேன-வழியால்; ஏகதரம்-இரண்டில் ஒன்றை; அன்வேதி-அடைகிறார்.

பொருள் : சத்தியகாமனிடம் பிப்பலாத முனிவர் கூறினார்: சத்தியகாமா, உயர் நிலை, சாதாரண நிலை என்று இறைவனின் இரண்டு நிலைகளாக இருப்பது இந்த ஓங்கார மந்திரம். எனவே அதனைத் தியானிக்கின்ற மகான், அதற்கேற்ப, இந்த இரண்டு நிலைகளில் ஒன்றை அடைகிறார்.

இறைவனுக்கு இரண்டு நிலைகள்-உருவமற்ற நிலை, உருவ நிலை. உருவமற்ற நிலை என்பது உயர் நிலை. உருவம் இல்லாத, குணங்கள் அற்ற, சிந்தனைக்கு எட்டாத நிலை அது. மிக உயர்ந்த நிலையிலுள்ள மிகச்சிலரே அந்த நிலையில் இறைவனை வழிபடவும் தியானிக்கவும் வல்லவர்கள். சாதாரண நிலையில், இறைவன் நம்மால் சிந்திக்கத்தக்க ஓர் உருவில் பல்வேறு மங்கலமான குணங்களுடன் உள்ளார். சிவன், விஷ்ணு, தேவி என்று பல்வேறு வடிவங்களில் நாம் அவரையே வழிபடுறோம். பொதுவாக, நம்மால் இந்த நிலையிலேயே இறைவனை வழிபட முடியும். இறைவனைப் போலவே ஓங்காரமும் உயர் நிலையிலும், சாதாரண நிலையிலும் தியானிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் ஒருவர் எப்படி அதனை தியானித்துப் பழகியிருக்கிறாரோ, அவர் அடைகின்ற நிலை அதற்கேற்ப அமையும். தொடர்ந்து இந்தக் கருத்து விளக்கப்படுகிறது.

இந்த உபநிஷதத்தில் ஓங்கார தியானத்தின் உயர் பரிமாணம் மட்டுமே விளக்கப்படுகிறது.

உயர் பரிமாண ஓங்கார தியானத்தின் வகைகளும் பலன்களும்(3-5)

அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையால் அமைந்தது ஓம் எனப்படும் ஓங்கார மந்திரம். இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மாத்திரை எனப்படுகின்றன. இவ்வாறு மூன்று மாத்திரைகள் சேர்ந்தது ஓங்கார மந்திரம்.

இந்த ஓங்கார மந்திரமே முதன்முதலாகப் படைக்கப்பட்டது. இந்த மந்திரத்தின் விரிவே ஓம் தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரசோதயாத் என்னும் காயத்ரீ மந்திரம். (திரண்ட பொருள்: யார் நமது புத்தியைத் தூண்டுகிறாரோ, அனைத்தையும் படைப்பவரான அந்த தெய்வத்தின் சிறந்த ஒளி வடிவை தியானிப்போம். அ விலிருந்து தத் ஸவிதுர் வரேண்யம் என்ற பகுதியும், உ விலிருந்து பர்கோ தேவஸ்ய தீமஹி என்ற பகுதியும், ம் மிலிருந்து தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற பகுதியும் வெளிவந்தன. காயத்ரீ மந்திரத்தின் முதல் பகுதியிலிருந்து ரிக்வேதமும், 2-ஆம் பகுதி யஜுர் வேதமும், 3-ஆம் பகுதியிலிருந்து சாம வேதமும் தோன்றின.

ரிக் வேதம் ஸ்துதிபரமானது, அதாவது துதிகளால் அமைந்தது. யஜுர் வேதம் கிரியாபரமானது, அதாவது யாகங்கள் போன்ற கிரியைகள் நிறைந்தது. சாம வேதம் ஞானபரமானது. அதாவது ஞான நெறியை அதிகம் வற்புறுத்துவது. இதன்படி, ரிக்வேதம்  பக்தியோகத்தையும், யஜுர் வேதம் கர்மயோகத்தையும், சாம வேதம் ஞான யோகத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் இங்கே ஓங்கார தியானம் விளக்கப்படுகிறது. முதல் மாத்திரையைத் தியானிப்பது, அதாவது பக்தியோக சாதனைகள் செய்வது முதல் வகை(3). இரண்டு மாத்திரைகளைத் தியானிப்பது, அதாவது பக்தி யோகத்துடன் கர்மயோகச் சாதனைகளையும் உரிய முறையில் இணைத்துச் செய்வது இரண்டாம் வகை(4). மூன்று மாத்திரைகளையும் சேர்த்து தியானிப்பது, அதாவது பக்தி, கர்ம, ஞான யோகங்களின் சமரச சாதனையே மூன்றாம் வகை. இந்தச் சாதனைகளையும் அவற்றினால் கிடைக்கின்ற பலன்களையும் இந்த மந்திரங்கள் கூறுகின்றன.

ஓங்கார தியானம்: முதல் வகை

3. ஸ யத்யேகமாத்ரம் அபித்யாயீத ஸ தேனைவ
ஸம்வேதிதஸ்தூர்ணமேவ ஜகத்யாமபிஸம்பத்யதே
தம்ரிசோ மனுஷ்யலோகமுபநயந்தே ஸ தத்ர தபஸா
ப்ரஹ்மசர்யேண ச்ரத்தயா ஸம்பன்னோ மஹிமானமனுபவதி

ஸ-அவன்; ஏகமாத்ரம்-முதல் மாத்திரை; யதி-அபித்யாயீத-ஆழ்ந்து தியானித்தால்; ஸ-அவன்; தேன ஏவ-அதனாலேயே; ஸம்வேதித-உணர்வொளி பெற்று; தூர்ணம் ஏவ-விரைவிலேயே; ஜகத்யாம்-உலகில்; அபிஸம்பத்யதே-திரும்பி வருகிறான்; தம்-அவளை; ரிச-ரிக்வேத தேவதைகள்; மனுஷ்யலோகம்-மனித உலகிற்கு; உபநயந்தே-கொண்டு வருகின்றன; ஸ-அவன்; தத்ர-அங்கே; தபஸா-தவத்துடனும்; ப்ரஹ்மசர்யேண-பிரம்மச்சரியத்துடனும்; ச்ரத்தயா-ஆழ்ந்த நம்பிக்கையுடனும்; ஸம்பன்ன-நிறையப் பெற்றவனாக; மஹிமானம்-மகிமையை; அனுபவதி-அனுபவிக்கிறான்.

பொருள் : ஓங்காரத்தின் முதல் மாத்திரையை ஆழ்ந்து தியானிப்பவன் உணர்வொளி பெறுகிறான். விரைவிலேயே உலகிற்குத் திரும்பி வருகிறான். ரிக்வேத தேவதைகள் அவனை மனித உலகிற்குக் கொண்டு வருகின்றன. அவன் இங்கே தவம், பிரம்மச்சரியம், ஆழ்ந்த நம்பிக்கை ஆகியவை நிறையப் பெற்றவனாக மகிமையை அனுபவிக்கிறான்.

ஓங்கார மந்திரத்தின் முதல் மாத்திரையைத் தியானிப்பவன், அதாவது பிரார்த்தனைகள், ஜபம், துதிகள், தோத்திரங்கள் போன்ற பக்தியோக சாதனைகளில் ஈடுபடுபவனை இந்த மந்திரம் குறிப்பிடுகிறது. அவன் உணர்வொளி பெறுகிறான். அதாவது, அவனுக்குச் சாதாரண வாழ்க்கை, இந்த உலகம் போன்ற உண்மைகளைக் கடந்த உயர் உலகங்கள், இறைவன் போன்ற உண்மைகள் தெளிவாகின்றன. இது கற்றறிவு, கேட்டறிவு போன்று புறத்திலிருந்து பெறப்படும் அறிவு அல்ல. அகவுணர்விலேயே கிடைக்கின்ற அனுபவம் ஆகும்.

உயர்வாழ்வில் இந்த அனுபவம் முதற்படி என்றாலும் ஆழ்ந்து தியானிப்பவனுக்கே இது வாய்க்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காற்றில்லாத இடத்தில் எரிகின்ற தீபம்போல் மனம் வேறு எதனையும் நினைக்காமல், தியானப்பொருளை மட்டுமே இடையீடின்றி சிந்திப்பது தான் ஆழ்ந்த தியானம். (ஆத்மப்ரத்யய ஸந்தான அவிச்சேதோ பின்னஜாதீய ப்ரத்யய அந்தராகிலீக்ருதோ நிர்வாதஸ்த தீபசிகாஸமோ பித்யான சப்தார்த்த 5:1 விளக்கவுரையில் ஸ்ரீசங்கரர்). பிரார்த்தனைகள், ஜபம், தியானம் போன்றவற்றை ஆழ்ந்த மன ஒருமைப்பாட்டுடன் செய்தால் மட்டுமே இந்தப் பலன் கிடைக்கும் என்பது பொருள்.

இத்தகையவன் மரணத்திற்குப் பிறகு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. அவனுக்கு அடுத்த பிறவி விரைவிலேயே வாய்க்கிறது. அந்தப் பிறவியில், அவன் உயர்வாழ்க்கைக்கான சாதனைகளைத் தொடர்வதற்கு ஏற்ற சூழ்நிலையில், உரிய மனநிலையுடன் பிறக்கிறான். தவம், பிரம்மச்சரியம், நம்பிக்கையுடன் கூடிய செயல்பாடு போன்றவை அவனுக்கு இயல்பாகவே வாய்க்கின்றன.

ஓங்கார தியானம்: 2 ஆம் வகை

4. அத யதி த்விமாத்ரேண மனஸி ஸம்பத்யதே ஸோந்தரிக்ஷம்
யஜுர்பிருன்னீயதே ஸோமலோகம்
 ஸ ஸோமலோகே விபூதிமனுபூத புனராவர்த்ததே

அத-மேலும்; யதி த்விமாத்ரேண-இரண்டு மாத்திரைகள்; மனஸி-மனத்தில்; ஸம்பத்யதே-வளம் பெறுகிறான்; ஸ-அவன்; யஜுர்பி-யஜுர்வேத தேவதைகளால்; அந்தரிக்ஷம்-இடைவெளியிலுள்ள; ஸோமலோகம்-சந்திர லோகத்திற்கு; உன்னீயதே-அழைத்துச் செல்லப்படுகிறான்; ஸ-அவன்; ஸோமலோகே-சந்திர லோகத்தில்; விபூதிம்-இன்பங்களை; அனுபூய-அனுபவித்து; புன-மீண்டும்; ஆவர்த்ததே-பிறக்கிறான்.

பொருள் : ஓங்கார மந்திரத்தின் இரண்டு மாத்திரைகளை ஆழ்ந்து தியானிப்பவன் மனவளம் பெறுகிறான். மரணத்திற்குப் பிறகு, யஜுர்வேத தேவதைகள் அவனைச் சந்திரலோகத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அங்கே இன்பங்களை அனுபவித்த பிறகு மீண்டும் பூமியில் பிறக்கிறான்.

பிரார்த்தனை, ஜபம், துதிகள் போன்றவற்றுடன் யாகம் முதலிய கிரியைகளையும் சேர்த்துச் செய்பவனுக்கு மனம் விரைவாக வசப்படுகிறது. பற்றின்றிச் செய்கின்ற நற்பணிகளும் யாகம் முதலிய கிரியைகளைப் போன்றவைதான். இப்படி பக்தியோகத்தையும் கர்மயோகத்தையும் இணைத்துச் செய்பவனுக்கு மனம் எளிதாக வசப்படுகிறது; மரணத்திற்குப் பிறகு இன்பங்களும் அவனுக்கு வாய்க்கின்றன. ஆனால் அவனும் பூமியில் மீண்டும் பிறக்க வேண்டியவனே.

ஓங்கார தியானம்: 3-ஆம் வகை

5. ய புனரேதம் த்ரிமாத்ரேண ஓமித்யேதேனைவ அக்ஷரேண
பரம் புருஷமபித்யாயீத ஸ தேஜஸி ஸூர்யே ஸம்பன்ன
யதா பாதோதரஸ்த்வசா விநிர்முச்யத ஏவம் ஹ வை ஸ பாப்மனா விநிர்முக்த ஸ ஸாமபிருன்னீயதே
ப்ரஹ்மலோகம் ஸ ஏதஸ்மாத் ஜீவகனாத் பராத்பரம் புரிசயம்
புருஷமீக்ஷதே ததேதௌ ச்லோகௌ பவத

புன-மேலும்; ய-யார்; த்ரிமாத்ரேண-மூன்று மாத்திரைகள்; ஓம் இதி-ஓம் என்று; அக்ஷரேண-மந்திரத்தால்; பரம்-மேலான; புருஷம்-இறைவனை; அபித்யாயீத-ஆழ்ந்து தியானிக்கிறானோ; ஸ-அவன்; தேஜஸி-ஒளியில்; ஸூர்யே-சூரியனில்; ஸம்பன்ன-அடைகிறான்; யதா-எப்படி; பாதோதர-பாம்பு; த்வசா-தோலிலிருந்து; விநிர்முச்யதே-விடுபடுகிறதோ; ஏவம் ஹ வை-அதுபோல் ஸ-அவன்; பாப்மனா-பாவங்களிலிருந்து; விநிர்முக்த-விடுபடுகிறான்; ஸாமபி-சாமவேத தேவதைகளால்; ப்ரஹ்மலோகம்-பிரம்ம லோகத்திற்கு; உன்னீயதே-கொண்டு செல்லப்படுகிறான்; ஏதஸ்மாத்-அங்கிருந்து; ஜீவகனாத்-உயிர்த்தொகுதிகளுக்கும்; பராத் பரம்-மேலானதற்கும் மேலான; புரிசயம்-உடம்பில் உறைகின்ற; புருஷம்-இறைவனை; ஈக்ஷதே-காண்கிறான்; தத்-அதுபற்றி; ஏதௌ-இரண்டு; ச்லோகௌ-மந்திரங்கள்; பவத-உள்ளன.

பொருள் : ஓங்கார மந்திரத்தின் மூன்று மாத்திரைகளையும் இணைத்து தியானிப்பதுடன், மேலான இறைவனையும் ஆழ்ந்து தியானிப்பவன் ஒளிப்பொருளான சூரியனை அடைகிறான். பாம்பு எப்படி தோலிலிருந்து விடுபடுகிறதோ, அப்படி அவன் பாவங்களிலிருந்து விடுபடுகிறான். மரணத்திற்குப் பிறகு, சமவேத தேவதைகள் அவனைப் பிரம்ம லோகத்திற்குக் கொண்டு செல்கின்றன. உயிர்த்தொகுதிகளின் தலைவரும், மேலானதற்கு மேலானவரும், உடம்புகளில் உறைபவருமான இறைவனை அங்கே அவன் காண்கிறான்.

இதுபற்றி, கீழ்வரும் இரண்டு மந்திரங்கள் உள்ளன.

இந்த மூன்றாவது வகை தியானத்தில் இறைவடிவையும் தியானிக்குமாறு கூறப்படுகிறது. பிரார்த்தனைகள், துதிகள், பற்றற்ற நற்பணிகள் போன்றவற்றுடன் இறைதியானமும் சேர்த்துச் செய்வதே மூன்றாம் வகை தியானம். சிவன், விஷ்ணு, தேவி போன்றதொரு தெய்வத்தையும் தியானிக்கும்போது அவர்களின் அருளும் நமக்குக் கிடைக்கிறது. (ஓங்காரே து விஷ்ண்வாதி ப்ரதிமா ஸ்தானீயே பக்த்யாவேசித ப்ரஹ்மபாவே த்யாயினாம் தத் ப்ரஸீததி 5:2 விளக்கவுரையில் ஸ்ரீசங்கரர்). உயர் வாழ்க்கையில் விரைந்து முன்னேற அது உதவுகிறது. இந்த வகை தியானத்தால் ஒருவனுக்கு இறைக் காட்சியே கிடைக்கிறது.

மூன்று வகை தியானங்களின் பலன்:6-7

மேலே கண்ட(3-5) மூன்று வகை தியானங்களின் பலன் இங்கே தொகுத்துச் சொல்லப்படுகிறது.

6. திஸ்ரோ மாத்ரா ம்ருத்யுமத்ய
ப்ரயுக்தா அன்யோன்ய ஸக்தா அனவிப்ரயுக்தா
க்ரியாஸு பாஹ்யாப்யந்தரமத்யமாஸு
ஸம்யக்ப்ரயுக் தாஸுந கம்பதே ஜ்ஞ

திஸ்ர-மூன்று; மாத்ரா-மாத்திரைகள்; ம்ருத்யுமத்ய-மரணத்திற்கு உட்பட்டவை; அனவிப்ரயுக்தா-பிரிக்காமல்; அன்யோன்ய ஸக்தா-ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு; க்ரியாஸு தியானத்தில்; ப்ரயுக்தா-ஈடுபடுத்தப்படும் போது; பாஹ்ய அப்யந்தர மத்யமாஸு-புற, அக, இடை நிலைச் செயல்களில்; ஸம்யக்-ஆழ்ந்து; ப்ரயுக்தாஸு-ஈடுபடுத்தப்படும்போது; ஜ்ஞ-மகான்; ந கம்பதே-சஞ்சலப்படுவதில்லை.

பொருள் : ஓங்காரத்தின் மூன்று மாத்திரைகளின் விளைவுகளும் மரணத்திற்கு உட்பட்டவை. ஆனால் அவற்றைப் பிரிக்காமல், ஒன்றுடன் ஒன்றை இணைத்து, புற-அக-இடைநிலைகளில் செயல்படும் விதமாகத் தியானத்தில் ஈடுபடுத்துகின்ற மகான் சஞ்சலப்படுவதில்லை.

மூன்று வகை தியானங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதுமட்டுமே சரியானது என்று கண்மூடித்தனமான கருத்துடன் அதனைப் பின்பற்றுவதால் சிறந்த விளைவுகளை எதுவும் ஏற்படுவதில்லை. அதனால் கிடைக்கின்ற பலன் உலகியல் ரீதியானதாக இருக்கும். மீண்டும்மீண்டும் பிறக்கவும் இறக்கவுமே அது வழி வகுக்கும். அதனால்தான் மூன்று மாத்திரைகளின் விளைவும் மரணத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டது.

செயல்கள்-தியானம், உருவ வழிபாடு-அருவ வழிபாடு ஆகிய இரட்டைகளை விளக்கும்போது ஈசாவாஸ்ய உபநிஷதம் கூறுகின்ற கருத்தை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். செயல்கள் மற்றும் தியானத்தைத் தனித்தனியாகப் பின்பற்றுபவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர். இரண்டையும் இணைத்துச் செய்பவர்கள் மரணத்தைக் கடந்து, இறவா நிலையை அடைகின்றனர். அதுபோலவே, உருவ வழிபாட்டையும், அருவ வழிபாட்டையும் தனித்தனியாகச் செய்பவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர். இரண்டையும் இணைத்துச் செய்பவர்கள் மரணத்தைக் கடந்து, இறவா நிலையை அடைகின்றனர். ஒருதலைப் பட்சமாக, கண் மூடித்தனமாக எதையும் பின்பற்றக் கூடாது. ஒவ்வொரு சாதனைகளையும் அவற்றின் தேவைக்கும், நமது தகுதிக்கும் ஏற்ப பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்பதே ஈசாவாஸ்ய உபநிஷதம் காட்டுகின்ற கருத்து ஆகும். (ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்), 9-14 மந்திரங்களின் விளக்கவுரை காண்க.

இதுபோன்ற கருத்தே இந்த மந்திரத்திலும் கூறப்படுகிறது. ஓங்கார மந்திரத்தின் அ, உ, ம் என்ற மூன்று மாத்திரைகளையும் தனித்தனியாக தியானிப்பவன் உயர்ந்த பலனைப் பெறுவதில்லை. பிரார்த்தனை, துதிகள் போன்ற பக்தி நெறி சாதனைகளை அ என்ற மாத்திரை குறிக்கிறது; யாகங்கள் அல்லது பற்றற்ற பணிகளை உ வும், ஞான நெறியை ம் என்ற மாத்திரையும் குறிப்பதாகக் கண்டோம். இவற்றில் ஒன்றை மட்டுமே எடுத்துக்கொள்ளாமல், நமது தேவைக்கும் தகுதிக்கும் ஏற்ப மூன்றையும் இணைத்துச் செய்ய வேண்டும் என்பதே இந்த மந்திரத்தின் கருத்து ஆகும். சுவாமி விவேகானந்தரின் கருத்து இங்கே நினைவில் கொள்ளப்பட வேண்டியதாகும்:

இந்த நான்கும் வகைகளின்( பக்தி, ஞானம், கர்மம் ஆகியவற்றுடன் யோகம் என்ற பாதையையும் சேர்த்து நான்கு என்று குறிப்பிடுகிறார் சுவாமி விவேகானந்தர். உபநிஷதம் முதல் மூன்றை மட்டுமே கூறுகிறது.) இணைப்பே உலகம் தழுவிய மதத்திற்கு மிகவும் நெருங்கியுள்ள குறிக்கோளாகும். இந்த ஞானம், யோகம், பக்தி, கர்மம் எல்லா அம்சங்களும் சமநிலையில் நிறைவாக உள்ள மனம் கொண்டவர்களாக எல்லோரும் இருப்பதற்கும் கடவுள் அருள் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அதுதான் லட்சியம், நிறைமனித லட்சியம் என்று நான் கருதுவது இதைத்தான். இந்த அம்சங்களுள் ஒன்றோ இரண்டோ உள்ளவர்கள் என்னைப் பொறுத்தவரை ஒருதலைப் பட்ச மானவர்களே. இத்தகைய ஒருதலைப்பட்சமானவர்களால்தான் இந்த உலகம் ஏறக்குறைய நிறைந்துள்ளது. அவர்களுக்குத் தங்கள் பாதை மட்டுமே தெரியும், மற்ற எல்லாம் அவர்களைப் பொறுத்தவரை அபாயமானவை, பயங்கரமானவை. இந்த நான்கு வழிகளிலும் சமச்சீராக இயைந்திருப்பதுதான் மதத்தைப்பற்றி நான் கொள்கின்ற லட்சியம்.

புற-அக-இடைநிலைகளில் செயல்படும் விதமாகத் தியானத்தில் ஈடுபட வேண்டும் என்கிறது மந்திரம். புற, அக, இடை நிலைகள் என்றால் விழிப்பு, தூக்கம், கனவு நிலைகள் என்று பொருள். தியானம் மேலோட்டமானதாக இருந்தால் உயர்ந்த பலன் கிடைப்பதில்லை. மனத்தின் ஆழங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி, மூன்று நிலைகளிலும் விளைவுகளை ஏற்படுத்த வல்லதாக இருக்க வேண்டும். அதாவது, தியானம் ஒரு மனப்பயிற்சி என்ற நிலையில் அல்லாமல் ஒரு வாழ்க்கை முறையாக, முழு வாழ்க்கையும் ஈடுபடுகின்ற விதத்தில் அமைய வேண்டும். அப்போது மட்டுமே பலன் உண்டு என்பது இங்கே குறிப்பிடப்பட்டது.

சஞ்சலப்படுவதில்லை என்றால் சூழ்நிலையால் பாதிக்கப்படுவதில்லை என்று பொருள். அவன் எந்தச் சூழ்நிலையிலும் தனது லட்சியத்தைத் தெளிவாக உணர்ந்தவனாக, கலக்கமுறாதவனாக இருக்கிறான்.

7. ரிக்பிரேதம் யஜுர்பிரந்தரிக்ஷம்
ஸாமபிர்யத் தத் கவயோ வேதயந்தே
தமோங்காரேணைவ ஆயதனேனான்வேதி வித்வான்
யத்தச்சாந்தம் அஜரமம்ருதமபயம் பரம் சேதி

ரிக்பி-ரிக்வேதம் பாதையால்; ஏதம்-இந்த உலகம்; யஜுர்பி-யஜுர்வேதப் பாதையால்; அந்தரிக்ஷம்-இடைவெளி; ஸாமபி-சாமவேதப் பாதையால்; யத் தத்-எதுவோ அதை; கவய-மகான்கள்; வேதயந்தே-அறிந்திருக்கிறார்கள்; யத்-எது; சாந்தம்-அமைதிமயமான; அஜரம்-மூப்பற்ற; அம்ருதம்-மரணமற்ற; அபயம்-பயங்களைக் கடந்த; பரம்-மேலான; தம்-அவரை; வித்வான்-மகான்; ஓங்காரேண ஆயதனேன ஏவ-ஓங்காரப் பாதையாலேயே; அன்வேதி-அடைகிறார்.

பொருள் : ரிக்வேதப் பாதையால் இந்த உலகமும், யஜுர் வேதப் பாதையால் இடைவெளியும், சாமவேதப் பாதையால்(பிரம்ம லோகமும்) கிடைக்கின்றன என்பதை மகான்கள் அறிந்திருக்கிறார்கள். அமைதி மயமான, மூப்பற்ற, மரணமற்ற, பயங்களைக் கடந்த, மேலான இறைவனை அவர்கள் ஓங்காரப் பாதையாலேயே அடைகிறார்கள்.

அ மாத்திரை தியானத்தால் விரைவில் மனிதப் பிறவியும், உ மாத்திரை தியானத்தால் சந்திரலோகமும், ம் மாத்திரை தியானத்தால் பிரம்ம லோகமும் கிடைக்கின்றன என்பதை 3-5 மந்திரங்களால் கண்டோம். ஆனால் இவை அனைத்தும் எல்லைக்கும் உட்பட்ட, மீண்டும் பிறவிக்குக் காரணமான பலன்களையே தரும். எனவே இறைவனை அடைந்து, மீண்டும் பிறப்பற்ற நிலையை அடைய விரும்புகின்ற மகான்கள் மூன்றையும் இணைப்பதான ஓங்காரப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; இறைவனை அடைகிறார்கள்.

பிரச்ன உபநிஷதம் பரமபுருஷ வித்யை என்ற தியான முறையைக் கூறுவதாகக் கண்டோம். இந்த 6 மந்திரங்கள் அதனை விளக்குகின்றன. அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையான ஓங்கார மந்திரத்தை வெவ்வேறு விதமாகத் தியானிப்பது, அவற்றிற்கான வேறுபட்ட பலன்கள் ஆகியவற்றை இந்த வித்யை கூறுகிறது.

இதி ப்ரச்னோபநிஷதி பஞ்சம: ப்ரச்ன:

 
மேலும் பிரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி) »
temple news
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ... மேலும்
 
temple news

1.அறிவைத் தேடி மார்ச் 27,2012

அறிவு எனும் தீபம் சுடர்விட்டுப் பிரகாசிக்காவிட்டால் உலகம் முழுவதுமே காரிருளில் மூழ்கியிருக்கும் ... மேலும்
 
ஆகாசம், பிராணன் ஆகிய இரண்டும் முதலில் படைக்கப்பட்டன 1:4. அனைத்துப் பொருட்களாவும் ஆகியிருப்பது ஆகாசம். ... மேலும்
 
சென்ற அத்தியாயத்தில் பிராண சக்தியின் மகிமைபற்றி கண்டோம். இங்கே அதன் செயல் பாடுகளைப்பற்றி காண்கிறோம். ... மேலும்
 
உலகின் படைப்பு, மனித வாழ்க்கையில் இரண்டு வழிகள், இல்லறம், வாழ்க்கையைச் செயல்படுத்துகின்ற பிராண சக்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar