பதிவு செய்த நாள்
08
ஆக
2019
03:08
கிருஷ்ணகிரி: அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கரகம் தலைக்கூடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். கிருஷ்ணகிரி அடுத்த, அவதானப்பட்டி மாரியம்மன் கோவில், 167ம் ஆண்டு ஆடி திருவிழா கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 2ல், அம்மனுக்கு மஹா அபிஷேகம், குங்குமம் வழங்குதலும், 3ல், நெய்விளக்கு ஏற்றுதல், தாலி பாக்கிய பூஜை நடந்தது. 4ல், அம்மனை அலங்கரித்து ஊஞ்சல் சேவை, விளக்கு பூஜைகளும், 5ல், சிவன் திருவிளையாடல், சிவன் பிரம்பு சாத்துதல் பூஜைகளும் நடந்தன. நேற்று முன்தினம் (ஆக., 6ல்) கோமாதா பூஜைகளும், கோலாட்டம், மயிலாட்டம், வாணவேடிக்கையும் நடந்தன. நேற்று (ஆக., 7ல்) அம்மன் வீதிஉலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில், நடந்த கரகம் தலை கூடுதல் நிகழ்ச்சியை காண, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இந்துசமய அற நிலையத்துறையினர், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் திருப்பதி கவுண்டர் மற்றும் ஊர்கவுண்டர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.