பதிவு செய்த நாள்
28
மார்
2012
11:03
அரியலூர்: கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் பெருந்திருவிழா வரும் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சியில் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கலியபெருமாள் கோவில் என, பக்தர்களால் அழைக்கப்படும் இத்திருக்கோவில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்களின் பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலின் ஆண்டு பெருந்திருவிழா, வரும் 31ம் தேதி ஸ்ரீராம நவமியன்று கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல் ஒன்பதாம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக ஏப்ரல் நான்காம் தேதி வெள்ளி கருடசேவை மற்றும் படத்தேர். ஆறாம் தேதி திருக்கல்யாண உற்சவம் மற்றும் கண்ணாடி மணி விமானங்களில் ஸ்வாமி அம்பாள் திருவீதி உலா. பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம் ஏப்ரல் எட்டாம் தேதியும், ஏகாந்தசேவை ஒன்பதாம் தேதியும் நடக்கிறது. பெருந்திருவிழாவை முன்னிட்டு, சேலம், ஆத்தூர், விழுப்புரம், திட்டக்குடி, திருச்சி, தஞ்சை, ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பெருந்திருவிழா ஏற்பாடுகளை, கோயிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாட்சியார் செய்து வருகிறார்.