பதிவு செய்த நாள்
13
ஆக
2019
02:08
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் 230 இடங்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் மக்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இரு இடங்களில் ஊர்வலம் நடந்தது.ஈகை பெருநாள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் 12 இடங்களில் திறந்தவெளி மைதானங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. ராமநாதபுரம் ஈத்கா மைதானம் கோரி தோப்பு பகுதியில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.
தொழுகை முடிந்த பின் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண் டனர். பரமக்குடியில் 4, கமுதியில் 2, ராமேஸ்வரம் 6, கீழக்கரையில் 20, திருவாடானை யில் 18, முதுகுளத்துார் ஒரு இடம் உட்பட 63 இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது.
* பார்த்திபனுாரில் ஜாமியா பள்ளிவாசலில் இருந்து கிரசன்ட் பள்ளி வரை முஸ்லிம் மக்கள் ஊர்வலம் நடத்தினர். பெருநாழி பகுதியில் ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து முஸ்லிம் தெரு வரை ஊர்வலமாக சென்றனர். மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது
* ராமநாதபுரத்தில் 13, பரமக்குடியில் 21, கமுதி 12, ராமேஸ்வரம் 26, கீழக்கரை 54, திருவாடா னை 21, முதுகுளத்துார் 20 இடங்கள் உட்பட 167 மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம் மக்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர்.
கீழக்கரையில் பள்ளிவாசல்கள், திடல்களில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகைக்கு முன்பு பயான் எனும் மார்க்க சொற்பொழிவு செய்யப்பட்டது. நேற்று (ஆக., 12ல்) காலை 7:00 மணி முதல் பள்ளிவாசல்களிலும், மைதானத்தின் திடல்களிலும் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.
கிழக்குத்தெரு அப்பா பள்ளி, குளங்கரைப்பள்ளி, மேலத்தெரு புதுப்பள்ளி, ஓடைக்கரைப் பள்ளி, பழைய குத்பா பள்ளி, ஜூம்மா பள்ளி, வடக்குத்தெரு, தெற்குத்தெரு பள்ளி, கடற்கரை பள்ளி ஆகிய இடங்களில் தொழுகை நடந்தது.
பெண்கள் தொழுகை செய்ய தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. பின் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர். குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை உறவினர்களுக்கும், இயலாதவர்களுக்கு வழங்கினர். ஏழை, எளியவர்களுக்கு சக்காத் எனப்படும் சிறிய தொகை வழங்கினர்.
மாலையில் கடற்கரைக்குச் சென்றும், வடக்குத்தெரு கொந்தக்கருணை அப்பா பள்ளித்திட லில் நடந்த பொழுதுபோக்கு நிகழ்சிகளிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
* பெரியபட்டினம்: அல்மஜ்ஜிதுல் பலா சிங்காரப்பூங்கா பள்ளி வாசலிலும், ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிகளிலும் ஏராளமானோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.