சிறுவர்கள் உடம்பில் ஊசி குத்தி நூல் கோர்க்கும் பாரம்பரிய திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2012 10:03
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பழையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நடக்கிறது. ஒன்பது நாட்கள் நடக்கும் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மார்ச் 27ம் தேதி (8ம் நாள் விழா) இரவு 10 மணிக்கு கோயில் முன்பாக 5 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கூடினர். அச்சிறுவர்களின் இடுப்பு பகுதியின் இரு புறத்திலும் கோயில் பூஜாரிகள் ஊசியால் குத்தி நூல் கோர்த்தனர்.தொடர்ந்து தேரோடும் வீதிகளை சுற்றி வந்து கோயில் அருகிலுள்ள குளத்தில் நீராடினர். பின், தங்களது உடம்பில் கோர்த்திருந்த நூலை உருவி விட்டு நேர்த்தி செலுத்தினர். பாரம்பரியமாக ஊசி குத்தும் குடும்பத்தை சேர்ந்த சிதம்பரம், 80 கூறுகையில், "" இந்த ஊரில் மட்டுமே 200 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவர்களுக்கு நூல் கோர்ப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இதுபோல் உடம்பில் நூல் கோர்த்துக் கொள்வது வழக்கம். தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாது. கையில் மாவிளக்கு ஏந்தும் பெண்களும் இதுபோல் புறங்கையில் நூல் கோர்ப்பர். 9ம் நாள் "விளாந்தானை எனும் சிலம்பு கட்டி ஆடும் நிகழ்ச்சியும் இத்திருவிழாவின் சிறப்பு அம்சமாகும், என்றார்.