பதிவு செய்த நாள்
29
மார்
2012
10:03
நகரி: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்பட்டு வரும் இலவச திருமணங்களை, இனி திருமலையில் மட்டுமே நடத்தி வைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில், புதுமணமக்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கும் திட்டம், "கல்யாணமஸ்து என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. புதுமண தம்பதியர் திருமலையில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாலும், இதுவரை மாநில அளவில், கோவில்களில் நடத்தப்பட்டு வந்த இலவச திருமண நிகழ்ச்சிகளினால், தேவஸ்தான நிர்வாகத்திற்கு அளவுக்கு அதிகமான செலவு ஏற்பட்டதாலும், இனி திருமலையில் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கல்யாணமஸ்து திட்டத்தில், இலவச திருமணம் செய்து கொள்ளும் புதுமண தம்பதியருக்கு, 2 கிராம் தங்கத் தாலி, 5 கிராம் வெள்ளி கால் மெட்டி வழங்கப்படும். புரோகிதர் ஒருவரும், மங்கள வாத்திய குழுவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் திருமலையில் வராகசுவாமி விருந்தினர் விடுதியில், இரண்டு அறைகள் வாடகைக்கு ஒதுக்கப்படும். இத்திருமணத்தில் கலந்து கொள்ளும் மணமக்களின் உறவினர்கள், 60 பேருக்கு நித்ய அன்னதான பிரசாத வளாகத்தில், இலவச உணவு வழங்கப்படும். புதுமணமக்களுடன் அவர்களது பெற்றோர்களில், 6 பேருக்கு, "சுபதம் வழியாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். ஒரு லட்டு, 10 ரூபாய் விலையில், 6 லட்டுகளை புதுமணமக்களுக்கு வழங்கவும் தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு, 35 இலவச திருமணம் என்ற கணக்குப்படி ஆண்டுக்கு, 12,600 திருமணங்கள் வரை நடக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலவச திருமணங்கள் நடத்தி வைக்கும் பொறுப்பு தேவஸ்தான கல்யாணகட்டா, (முடி காணிக்கை செலுத்தும்) பிரிவின் துணை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். இவருக்கு உதவியாக இணை நிர்வாக அதிகாரி ஒருவரையும், இரண்டு மூத்த மற்றும் இளநிலை அலுவலர்களையும், காசாளர்களையும், ஆறு உதவியாளர்களையும் தேவஸ்தான நிர்வாகம் நியமனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.