வடமதுரை, வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் நேற்று மாலை தேரோட்டம் நடந்தது.
கடந்த ஆக.7-ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஆக. 19ம் தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, மண்டகப்படிதாரர் வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. திருக்கல்யாணம், ஆக.13 இரவு சவுந்தரவள்ளி தாயார் சன்னதியில் நடந்தது.திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக கோயில் வளாகத்தில் சுதர்ஷண ஹோமமும், மதுரை அழகர் மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. சன்னதியில் இருந்து ஊர் பிரமுகர்கள் அழைத்து வர, முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளினார். மாலை 4:40 மணியளவில் பக்தர்கள் கரகோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் திண்டுக்கல் ரோடு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், திருச்சி ரோடு வழியே நகரை வலம் வந்தது. சுற்றுப்பகுதிகளை சேர்ந்த நுாறுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.