பதிவு செய்த நாள்
16
ஆக
2019
02:08
மாமல்லபுரம்:தேசிய முன்மாதிரி பாரம்பரிய நினைவுச்சின்னமாக, ஆதர்ஷ் சிறப்பு பெற்ற, மாமல்லபுரம் கடற்கரை கற்கோவில் வளாகத்தில் வசதிகளை மேம்படுத்த, பொதுத்துறை நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கி.பி., 7ம் நுாற்றாண்டு, பல்லவர் கால, பாறை சிற்பங்கள் அமைந்துள்ள மாமல்லபுரம், சர்வ தேச பாரம்பரிய நினைவுச்சின்ன சுற்றுலா இடமாக விளங்குகிறது.கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடைவரை மண்டபங்கள் உள்ளிட்ட சிற்பங்கள் இங்கு இருப்பதால், உள் மற்றும் வெளிநாட்டுப் பயணியர், இவற்றை காண குவிகின்றனர்.ஐக்கிய நாடுகள் சபை, கலாசாரக் குழு, இவற்றை, சர்வதேச நினைவுச்சின்னங்களாக, அங்கீகரித்துள்ளது.
இச்சூழலில், நாட்டின், 25 பாரம்பரிய சின்னங்களை, தேசிய முன்மாதிரி நினைவு, ஆதர்ஷ் சின்னங்களாக, மத்திய அரசு, மூன்றாண்டுகளுக்கு முன் அறிவித்தது.தமிழகத்தில், கடற்கரை கோவில், தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், ஆதர்ஷ் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. ஆதர்ஷ் சின்ன பகுதியில், சுற்றுலாவிற்கு ஏற்ற சூழல், கலைச்சின்னங்கள் குறித்த கருத்தியல், காட்சியியல் கூடம், பிரகாச விளக்குகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ’பேட்டரி’ வாகனம், ’வை - பை’ எனும் கம்பியில்லா இணையம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, பொதுத் துறை நிறுவன, சமூக பொறுப்பு திட்டத்தில், இவ்வசதிகள் மேற் கொள்ள முடிவெடுத்து, ’இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ நிறுவன நிர்வாகத்துடன், மத்திய கலாசாரத் துறை, தற்போது பரிசீலிக்கிறது.இந்நிலையில், அந்நிறுவன பிரதிநிதிகள், அண்மையில், கடற்கரை கோவிலை பார்வையிட்டனர்.
இது குறித்து, தொல்லியல் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:இக்கோவில் பகுதியில், பயணியர் தேவைக்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம், பல வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்காக, எங்கள் துறை, அந்நிறுவனத்துடன் பரிசீலிக்கிறது. கோவில் பார்வை நேரத்தை, இரவு, 9:00 மணி வரை நீட்டிப்பது குறித்தும், துறை தலைமையகம் அறிவிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.